உலகம்

‘தலிபான் தோட்டாவின் பாதிப்பை இன்று உணர்கிறேன்’ -அறுவை சிகிச்சைக்குப் பின் மலாலா!

78views

“9 ஆண்டுகள் கழிந்துவிட்டன. தாலிபான்களால் சுடப்பட்ட துப்பாக்கி குண்டு உண்டாக்கிய விளைவை, மருத்துவர்கள் இன்றும் என் உடலில் சரிசெய்து வருகின்றனர்” என்று எழுதியுள்ளார் சமூகப் போராளியான மலாலா யூசுப்சாய். பாகிஸ்தானின் கிராமப் பகுதி ஒன்றில், தாலிபான்களால் பெண் குழந்தைகளின் கல்வி மீது தடை விதிக்கப்பட்ட போது, அதை எதிர்த்துக் குரல் எழுப்பினார் 15 வயது சிறுமியான மலாலா. இதற்காக மலாலா மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு, அவர் மருத்துவ உதவிகளுக்காக இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டார். பெண் குழந்தைகளின் கல்விக்காக, உயிரைப் பணயம் வைத்து போராடியதற்காக மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருந்தது.

கடந்த இரண்டு வாரங்களாக, ஆப்கானிஸ்தானின் அரசியல் சூழல் பல்வேறு முக்கிய மாற்றங்களை எதிர்கொண்டது. ஆப்கானிஸ்தானில் அமைக்கப்பட்டிருந்த அரசு நீக்கப்பட்டு, தலைநகர் காபூல் முதல் நாட்டின் முக்கிய நகரங்கள் ஆயுதம் ஏந்திய தாலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. தாலிபான்களால் ஆப்கானிஸ்தான் ஏற்கனவே 1996 முதல் 2001ஆம் ஆண்டு வரை ஆளப்பட்டது. தற்போது மீண்டும் தாலிபான்கள் ஆட்சி அமைத்துள்ளனர். கடந்த முறை ஆட்சி செய்த போது, தாலிபான்கள் பெண்கள் கல்வி கற்கவும், பணியில் ஈடுபடவும் தாலிபான்கள் தடை விதித்திருந்தனர். அதன் நீட்சியாகவே, பாகிஸ்தானில் மலாலா தாலிபான் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டார்.

தற்போது ஆப்கானிஸ்தான் மீண்டும் தாலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்திருப்பதையடுத்து, மலாலா அமெரிக்காவில் ஆறாவது முறையாக அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தார். இதுகுறித்து விரிவாக அவர் இணைய தளம் ஒன்றில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், “2012ஆம் ஆண்டு, தாலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒருவரால் என் முகத்தில் சுடப்பட்டு, துப்பாக்கி குண்டு எனது இடது கண்ணில் உரசி, மண்டை ஓட்டில் இறங்கி மூளையைத் தாக்கியது. இதில் முகத்தின் நரம்பு துண்டிக்கப்பட்டு, செவித் திறன் பாதிக்கப்பட்டு, எனது தாடை எலும்பு உடைந்தது” என்று தனக்கு நேர்ந்த தாக்குதல் குறித்து விவரித்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டவுடன் மயக்கமடைந்த மலாலா, கண் விழித்த போது இங்கிலாந்தின் பிர்மிங்கம் மருத்துவமனையில் இருப்பதை உணர்ந்துள்ளார். மருத்துவமனையின் உயர்தர சிகிச்சைகளைப் பார்த்த பிறகு, “நான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் போது, ஒரு வேலையில் சேர்ந்து, பணம் சம்பாதித்து, போன் வாங்கி, என் குடும்பத்தைத் தொடர்புகொண்டு, கடுமையாக வேலை செய்து மருத்துவமனையின் கட்டணத்தைக் கட்டுவேன்” என்று தனக்குள் நினைத்துக் கொண்டதாக மலாலா கூறியுள்ளார். எனினும், அவர் தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகளால் குணமாகி வருகின்றார்.

மலாலாவின் உடலில் இதுவரை 6 பெரிய அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. குழந்தையைப் போல, மீண்டும் முதலில் இருந்து பேசுவது, நடப்பது எனப் பல்வேறு இன்னல்களைச் சந்தித்துள்ளார் மலாலா.”தாலிபான்களிடம் இருந்து நான் தப்பித்துக் கொண்டேன். எனது ஆப்கானிஸ்தான் சகோதரிகள் குறித்து அச்சப்படுகிறேன்” என்றும் மலாலா கூறியுள்ளார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!