தமிழகத்தில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பிளஸ் 2 பொது தேர்வு ரத்து: ஆசிரியர் அமைப்புகள் வரவேற்பு
தமிழகத்தில் மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு ஆசிரியர் அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக ஆசிரியர் அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கைகள்:
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத் தலைவர் கு.தியாகராஜன்: தேர்வைக் காட்டிலும் மாணவர்களின் உயிர் முக்கியமானது என்ற அடிப் படையில் முதல்வர் எடுத்துள்ள இந்த முடிவு வரவேற்கத்தக்கது. இதற்காக முதல்வருக்கும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கும் நன்றி. உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு பிளஸ் 2 மதிப்பெண் அவசியம் என்ற அடிப்படையில், மதிப்பெண் வழங்குவது குறித்து முடிவெடுக்க குழு அமைத்திருப்பது, மாணவர்கள் மீதான அரசின் அக்கறையை உணர்த்துகிறது.
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் செ.நா.ஜனார்த்தன், பொதுச் செயலர் என்.ரவி: பிளஸ் 2 தேர்வை ரத்து செய்து, மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக குழு அமைத்துள்ளதை வரவேற்கிறோம். பிளஸ் 2 மதிப்பெண்களைக் கொண்டு மட்டுமே தமிழகத்தில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கது. சமூகநீதிக்கு எதிரான ‘நீட்’ நுழைவுத்தேர்வை ரத்துசெய்ய வேண்டும்.
தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன்: ஆசிரியர் சங்க நிர்வாகிகள், பெற்றோர் மற்றும் கல்வியாளர்களின் கருத்துக்களை கேட்டு, பிளஸ் 2 தேர்வை ரத்து செய்திருப்பது வரவேற்கத்தக்கது. மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வை ரத்து செய்யவும், இளங்கலை, பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வை வேறுவழியில் நடத்த முயன்றால், அதையும் தடுத்து நிறுத்தவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சா.அருணன்: கரோனோ தொற்று காலத்தில், மாணவர்களின் நலனை மட்டுமே கருத்தில்கொண்டு பிளஸ் 2 தேர்வை ரத்துசெய்திருப்பதை வரவேற்று, தமிழக அரசுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துக்கொள்கிறோம். அதேபோல, ‘நீட்’ உள்ளிட்ட அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழக முதல்வரின் கோரிக்கையையும் மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். என தெரிவித்துள்ளனர்.