தமிழகத்தில் இன்று காலை முதல் 60% பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக தொமுச தெரிவித்துள்ளது.
விலைவாசி உயர்வு,பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதையும், பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வு உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்றும்,இன்றும் தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தத்தை அறிவித்தன.அதன்படி, நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று காலை முதல் நடைபெற்று வருகின்றது.
சிஐடியூ,ஏஐடியூசி,யூடியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இந்த இரண்டு நாள் பொது வேலை நிறுத்த போராட்டத்தை போராட்டம் நடத்தி வருகின்றன.இதன்காரணமாக, தமிழகத்தில் நேற்று காலை 11 மணி நிலவரப்படி 68% பேருந்துகள் ஓடவில்லை என்றும் 32% பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டதாகவும் தமிழக போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்தது.இதனால்,மாணவர்கள்,வேலைக்கு செல்பவர்கள் என பொதுமக்கள் பலர் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில்,தமிழகத்தில் இன்று 60% அரசு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக்கு தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் தொமுச பொருளாளர் நடராஜன் அறிவித்துள்ளார். வேலை நிறுத்த போராட்டம் இன்று தொடர்ந்தாலும் தமிழகத்தில் 60% அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
பொதுமக்களின் நலன் கருதி இன்று வழக்கம்போல் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டதாகவும்,அத்தியாவசிய பணிகள் பாதிக்காமல் வேலைநிறுத்த போராட்டம் தொடரும் எனவும் கூறினார்.மேலும்,பொதுமக்கள் நலன் கருதி சாதாரண ஊழியர்கள் வழக்கம்போல் பணிக்கு செல்வார்கள் என்றும் முன்னணி ஊழியர்கள் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் எனவும் குறிப்பித்திருந்தார்.
இந்நிலையில்,தமிழகத்தில் இன்று காலை முதல் 60% பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக தொமுச தெரிவித்துள்ளது.நேற்றைய தினத்தை விட பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுவதால் மக்கள் சிரமமின்றி பயணம் மேற்கொள்கின்றனர்.