தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது .
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய நீலகிரி , கோவை , திருப்பூர் , தேனி , திண்டுக்கல் , தென்காசி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் . நாளை கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் , ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் .
09.09.2021, 10.09.2021: தென் மாவட்டங்கள் , கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் , ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் . சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் , நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் .
வட மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக இன்று கேரள மற்றும் கர்நாடக கடலோர பகுதிகள் , லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் .
வரும் 10ஆம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.