தமிழகம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் மீண்டும் கனமழை; 2 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கின: 200 ஏக்கர் வாழைத் தோப்பிலும் நீர் தேங்கியது

52views

தஞ்சாவூர் மாவட்டத்தில் மீண்டும் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக 2 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

200 ஏக்கர் வாழைத் தோப்பில் மழைநீர் தேங்கியுள்ளது.

தஞ்சாவூர் உட்பட டெல்டா மாவட்டங்களில் ஏற்கெனவே பெய்த தொடர் கனமழையால் 1.50 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. கடந்த 4 நாட்களாக மழை குறைந்ததால், வயலில் தேங்கிய தண்ணீர் வடியத் தொடங்கியது. வடிகால் முறையாக தூர் வாரப்படாததால், பல இடங்களில் தண்ணீர் வடிவதில் தாமதமாகி, பயிர்கள் அழுகத் தொடங்கின.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் மீண்டும் கனமழை பெய்ததால் அம்மையகரம், செய்யாமங்கலம், பாதிரக்குடி, கழுமங்கலம், களர்பட்டி, அம்மன்குடி, அந்தலி, நடுக்காவேரி, அம்மன்பேட்டை, ஆற்காடு, கண்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கரில் புதிதாக நடவு செய்யப்பட்ட சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. கன மழையால் 101 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன.

தொடர் மழையுடன், மேட்டூரில் இருந்து வரும் உபரி நீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்பட்டதால், கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களான ஆச்சனூர், சாத்தனூர், வடுககுடி, மருவூர் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள 200 ஏக்கர் வாழைத் தோப்புகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இன்னும் சில நாட்கள் மழை தொடர்ந்தால், தண்ணீர் வடிய வழியில்லாமல், வேர் அழுகி வாழை சாயக் கூடிய நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வாழை உற்பத்தியாளர் சங்க தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் மதியழகன் கூறும்போது, ”பொங்கல் பண்டிகையையொட்டி, வாழை அறுவடை செய்ய இருந்த நிலையில், தற்போது பெய்துள்ள மழையால் தேங்கியுள்ள நீர் வடிய தாமதமானால், வாழை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.2 லட்சம் வரை இழப்பு ஏற்படும்” என்றார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை தொடங்கிய மழை நேற்று மாலை வரை விடாமல் பெய்தது. மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி தஞ்சாவூரில் 11.6 செ.மீ. மழை பதிவானது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!