விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் முடிவடைந்த சில வாரங்களில் ஈட்டி எறிதல் பயிற்சியாளர் பதவி நீக்கம்

39views

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி முடிவடைந்த சில வாரங்களில் ஈட்டி எறிதல் பயிற்சியாளர் உவே ஹான் நீக்கப்பட்டுள்ளதாக இந்திய தடகள சம்மேளன தலைவர் சுமரிவாலா தெரி வித்துள்ளார்.

இந்திய தடகள சம்மேளனத்தின் நிர்வாகக்குழு கூட்டம் கடந்த இரு நாட்கள் டெல்லியில் நடைபெற்றது. இதன் முடிவில் ஈட்டி எறிதல் பயிற்சியாளர் உவே ஹான் நீக்கப்பட்டுள்ளதாக இந்திய தடகள சம்மேளனத்தின் தலைவர் சுமரிவாலா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, ‘நாங்கள் உவே ஹானை மாற்றுகிறோம். அவரது செயல்திறன் நன்றாக இல்லை. இரண்டு புதிய பயிற்சியாளர்களைக் கொண்டுவர முடிவு செய்துள்ளோம்’ என்றார்.

ஜெர்மனியைச் சேர்ந்த 59 வயதான உவே ஹான் கடந்த 2017ம் ஆண்டு நீரஜ் சோப்ராவிற்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தார். 100 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்த ஒரே வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ள உவே ஹான், கடந்த 2018ம் ஆண்டு ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டுகளில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்ற போது அவருக்கு பயிற்சியாளராக செயல்பட்டிருந்தார். மேலும் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான தேசிய பயிற்சியாளர் பொறுப்பையும் ஏற்றிருந்தார்.

உவே ஹான் நீக்கப்பட்டுள்ள நிலையில் நீரஜ் சோப்ரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்றபோது அவருக்கு பயிற்சியளித்த பயோமெக்கானிக்கல் நிபுணர் கிளாஸ் பார்டோனீட்ஸ் தொடருவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம்உவே ஹான், இந்திய தடகள சம்மேளனம் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் மீது சில குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

அப்போது அவர், ‘நான் இங்கே வந்த போது, என்னால் மாற்றத்தை உருவாக்க முடியும் என எண்ணினேன். எனினும், இந்திய விளையாட்டு ஆணையம், தடகளசம்மேளனம் ஆகியவற்றை நடத்துபவர் களுடன் இணைந்து பணியாற்றுவது கடினமாக இருக்கிறது. அறிந்து செய்கிறார்களா, அறியாமையில் செய்கிறார் களா என்று தெரியவில்லை’ என்று கூறியிருந்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!