இந்தியாசெய்திகள்

டெல்லியில் தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஜூன் 26-ல் ஆர்ப்பாட்டம்: அனைத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

61views

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 26-ம் தேதி அனைத்து மாவட்டங்கள் மற்றும் தொழில் மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மத்திய சங்கங்களின் கூட்டுக் குழு அறிவித்துள்ளது.

இதுகுறித்து எல்பிஎப்., எச்.எம்.எஸ்., ஏஐடியுசி, சிஐடியு, ஐஎன்டியுசி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:

டெல்லி மாநகரின் எல்லைகளில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் ஜூன் 14-ம் தேதியுடன் 200 நாட்களை நிறைவு செய்கிறது. மூன்று வேளாண் சட்டங்களையும், மின்சாரதிருத்தச் சட்டத்தையும் திரும்பப்பெறக்கோரி, விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிப்படுத்தக்கோரி, பனி, மழை, வெயில் பாராமல் தொடர்ந்து விவசாயிகள் போராடி வருகின்றனர். இதுவரை 500-க்கும் மேற்பட்டவர்கள் களத்திலேயே உயிரிழந்திருக்கிறார்கள்.

வரும் 26-ம் தேதி புகழ்பெற்ற விவசாயிகள் தலைவர் தயானந்த சரஸ்வதியின் நினைவு தினமாகும். அன்று மாநிலத் தலைநகர்களில் ஆளுநர் மாளிகை முன்பு விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர்.

4 தொழிலாளர் சட்ட தொகுப்புகள், 3 வேளாண் சட்டங்கள், மின்சாரதிருத்த சட்டம் ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்த வேண்டும். குறிப்பிட்ட கால வரையறைக்குள் இந்தியா முழுவதும் அனைவருக்கும் கட்டணம் இல்லாமல் தடுப்பூசி செலுத்த வேண்டும். வருமானவரி செலுத்தும் அளவுக்குவருவாய் இல்லாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7,500நிவாரணத் தொகையும், ஒவ்வொருவருக்கும் 10 கிலோ உணவுப் பொருட்களும் வழங்க வேண்டும்.

பொதுத்துறை நிறுவனங்களையும், அரசுத் துறைகளையும் தனியார்மயமாக்கும் கொள்கைகளைக் கைவிட வேண்டும். கரோனா காலத்திலும் இரவு, பகலாய் உழைக்கும் உள்ளாட்சி தூய்மைப் பணி, ரயில்வே போக்குவரத்து, நிலக்கரி, பாதுகாப்பு, உருக்கு, பெல் தொழிற்சாலைகள், தொலைத்தொடர்பு, அஞ்சல், வங்கிகள், காப்பீடு, மின்சாரம், குடிநீர்,கல்வி, மருத்துவப் பணிகள், துறைமுக ஊழியர்கள் அனைவரையும் முன்களப் பணியாளர்களாக அறிவித்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

ஆஷா அங்கன்வாடி தூய்மைப்பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து முன்கள பணியாளர்களுக்கும் ரூ.50 லட்சம் காப்பீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது. சென்னையில் சின்னமலை ராஜீவ்காந்தி சிலை அருகில் வரும் 26-ம் தேதி தர்ணா போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!