டென்மார்க் ஓபன்: மீண்டும் வெற்றியுடன் களத்திற்கு திரும்பிய பி.வி.சிந்து : காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி !
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். அத்துடன் ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இரண்டு பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்திருந்தார். அதன்பின்னர் உபெர் கோப்பை பேட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து பங்கேற்கவில்லை.
இந்நிலையில் ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு இன்று தொடங்கிய டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து பங்கேற்றார். அதில் முதல் சுற்றில் பி.வி.சிந்து உலக தரவரிசையில் 29ஆவது இடத்தில் உள்ள துருக்கி வீராங்கனை யிகிட்டை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிந்து முதல் கேமை 21-12 என்ற கணக்கில் வென்றார். அதன்பின்னர் இரண்டாவது கேமையும் 21-10 என்ற கணக்கில் எளிதில் வென்றார். இதன்மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு பி.வி.சிந்து தகுதி பெற்று அசத்தினார்.
டென்மார் ஓபனின் முதல் நாளான இன்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஶ்ரீகாந்த் சக இந்திய வீரரான சாய் பிரணீத்தை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் ஶ்ரீகாந்த் 21-14,21-11 என்ற கணக்கில் வென்றார். அதேபோல் மற்றொரு இந்திய வீரர் சமீர் வெர்மா தாய்லாந்து நாட்டின் விதித்சாரனை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சமீர் வெர்மா 21-17,21-14 என்ற கணக்கில் வென்றார். இந்த இருவரும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.
மேலும் எம்.ஆர்.அர்ஜூன்-துருவ் கபிலா ஜோடி முதல் சுற்றில் இங்கிலாந்து இணையை வென்றது. அதேபோல் சத்விக்சாய்ராஜ் மற்றும் சிராஜ் செட்டி இணையும் இங்கிலாந்து இரட்டையர் அணியை வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஆடவர் இரட்டையர் பிரிவில் மனு ஆட்ரி மற்றும் சுமித் ரெட்டி ஜோடி மலேசிய இணையிடம் தோல்வி அடைந்து முதல் சுற்றுடன் வெளியேறியது.