டி-20 உலகக் கோப்பைத் தொடரில் நமீபியா அணி ஸ்காட்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.
டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. அபுதாபியில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஸ்காட்லாந்து-நமிபியா அணிகள் மோதின. டாஸ் வென்ற நமிபியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. நமீபியாவின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி வீரர்கள் தடுமாறினர்.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜார்ஜ் முன்சே முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மெக்லியாட்டும் கேப்டன் பிரிங்டனும் ரன் எதுவும் எடுக்காமல் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இவர்கள் விக்கெட்டை டிரம்பல்மன் தூக்கினார். முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து ஸ்காட்லாந்து தடுமாறியது.
ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மைக்கேல் லீஸ்க் 27 பந்துகளில் 44 ரன்களும் கிறிஸ் கிரீவ்ஸ் 25 ரன்களும் எடுத்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்தது.
நமிபிய வீரர் ரூபன் டிரம்பல்மன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து, 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நமிபியா களமிறங்கியது. அந்த அணியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் தடுமாறியது. இருந்தாலும் கடைசி ஓவரில் அந்த அணி வெற்றி பெற்றது. அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.