டி20 உலகக்கோப்பை போட்டியில், நமிபியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
டி 20 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்ட இந்திய அணி, நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் நமிபியா அணியை எதிர்கொண்டது. விராத் கோலி கேப்டனாக ஆடிய கடைசி போட்டி இது. டாஸ் வென்ற விராத் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி நமிபியா முதலில் களமிறங்கியது.
அந்த அணியில் அதிகபட்சமாக டேவிட் வைஸ் 26 ரன்களும் ஸ்டீபன் பார்ட் 21 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை என்பதால் அந்த அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பும்ரா 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பின்னர், 133 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மாவும் கே.எல்.ராகுலும் களமிறங்கினர். ரோகித் சர்மா 31 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்து 56 ரன்களில் ஆட்டமிழந்தார்.பின்னர் கே.எல்.ராகுலுடன், சூர்யகுமார் யாதவ் இணைந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல்.ராகுல் 35 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.
இதைத் தொடர்ந்து 15.2 ஒவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 136 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் எடுத்து வெற்றி பெற்றது. கே.எல்.ராகுல் 54 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 25 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த போட்டியுடன் இந்திய அணி, இந்த தொடரில் இருந்து வெளியேறியது.
இந்தப் போட்டியில், ரோகித் சர்மா, சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் 3 ஆயிரம் ரன்களை கடந்தார். அவர் 116 போட்டிகளில் விளையாடி 4 சதம், 24 அரைசதம் உள்பட 3,038 ரன்கள் எடுத்துள்ளார். இந்த பட்டியலில் 3,227 ரன்களுடன் விராத் கோலியும் 3,115 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் நியூசிலாந்தின் மார்ட்டின் கப்திலும் இருக்கின்றனர்.