உலகம்

ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி: இதுவரை இல்லாத அளவில் பிரபஞ்சத்தை காட்டும் ஒரு புதிய தொலைநோக்கி

55views

டிசம்பர் மாதம் 18ஆம் தேதி ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதனால் நமக்கு கிடைப்போகும் தகவல் மிக மிக சுவாரஸ்யமானது.

இந்த சூப்பர் தொலைநோக்கி பிரபஞ்சத்தை மேலும் ஆழமாக தெரிந்து கொள்ள உதவும்.

13.5 பில்லியன் வருடங்களுக்கு முன்பு பிரபஞ்சத்தில் ஒளிர்ந்த நட்சத்திரத்தின் ஒளியை இந்த தொலைநோக்கி மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

“இந்த தொலைநோக்கி பிரபஞ்சம் குறித்த பல ஆச்சர்ய தகவலை நமக்கு தெரியப்படுத்தும். அதுதான் இந்த தொலைநோக்கி குறித்த சுவாரஸ்யமான விஷயமென்று நான் நினைக்கிறேன்” என நாசாவின் கோடார்ட் ஸ்பேஸ் ப்ளைட் சென்டரின் வானியல் இயற்பியலாளர் ஆம்பர் நிகோலே ஸ்ட்ரா தெரிவிக்கிறார்.

இவர் இந்த தொலைநோக்கி உருவாக்க திட்டத்தின் துணை விஞ்ஞானி ஆவார்.

ஆனால் இது எவ்வாறு வேலை செய்யும்? நாம் எப்போது உண்மையான நட்சத்திர கூட்டத்தை பார்ப்போம்?

சுற்று வட்டப்பாதையில் 6.5 மீட்டர் அளவில் இதுவரை இல்லாதளவுக்கு பெரிய வானியல் கண்ணாடியை இந்த வெப் தொலைநோக்கி பயன்படுத்தும்.

அதாவது அடுக்கிவைக்கப்பட்ட அட்டைகள் ஒன்றன் பின் ஒன்றாக விரிவது போல இது விண்வெளியில் விரிவடையும்.

இந்த திட்டம் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கனடாவின் விண்வெளி முகமைகள் சேர்ந்து 10 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் முன்னெடுக்கப்படுகிறது.

ஃபிரான்ஸின் கயானாவிலிருந்து ஐரோப்பிய ஏரியானா 5 ராக்கெட்டைக் கொண்டு இந்த தொலைநோக்கி ஏவப்படும்.

ராக்கெட்டிலிருந்து வெளியே வந்த பிறகு 30 நிமிடங்களுக்குள் 344 முக்கிய தருணங்களை அது எதிர்கொள்ளும்.

வெப் தொலைநோக்கி பூமியிலிருந்து 1.5 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் நிலைநிறுத்த வேண்டும் இதற்கு 30 நாட்கள் ஆகும்.

இந்த தொலைநோக்கி முழுமையாக செயல்பட ஆறு மாதங்கள் ஆகும். அதன் பிறகுதான் நாம் இதன் முதல் படத்தை பார்க்க முடியும்.

“தொலைநோக்கியை விண்வெளியில் வைத்துவிட்ட பிறகு அதன் சிக்கலான அமைப்பு விரிவடையும். பல மாதங்களுக்கு பிறகு தொலைநோக்கி குளிர்ச்சியடையும். அதன்பின் கண்ணாடிகள் ஒவ்வொன்றாக வரிசையில் அமைக்கப்பட்டு அது இயங்க தொடங்கும்.” என்கிறார் ஸ்ட்ரா.

இந்த பிரபஞ்சம் குறித்து நமக்கு விரிவான ஒரு அறிவை கொடுத்த ஹபல் என்ற தொலைநோக்கியை காட்டிலும் இந்த வெப் தொலைநோக்கி அதிக திறன் கொண்டது. கடந்த மூன்று சாப்த காலத்தில் ஹபல் நமக்கு பல அரிய புகைப்படங்களை கொடுத்துள்ளது.

வெப் தொலைநோக்கி பயன்படுத்தப்பட்டாலும், ஹபல் தொலைநோக்கி அடுத்து 10 அல்லது 20 வருடத்திற்கு செயலாற்றும். வெப் தொலைநொக்கியை ஹபல் தொலைநோக்கியின் அடுத்த வடிவமாகதான் விஞ்ஞானிகள் பார்க்கிறார்கள்.

வெப் தொலைநோக்கி பிரபஞ்சத்தை காண அகச்சிவப்பு கதிர்களை பயன்படுத்தும். அது மனித கண்களுக்கு தெரியாது. ஹபல் தொலைநோக்கியில் குறைந்த அகச்சிவப்பு பயன்பாடே உள்ளது.

வெப் தொலைநோக்கி மூலம் மேகங்களின் ஊடாகவும் நாம் காணலாம்.

“நமது சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் தொடங்கி 13.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய பால்வெளி மண்டலம் வரை நாம் இந்த தொலைநோக்கியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்” என்கிறார் ஸ்ட்ரா.

இது பிற கோள்களில் உயிர்கள் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள உதவும். ஏனென்றால் இது கோள்களின் வளிமண்டலத்தில் உள்ள மூலக்கூறுகள் குறித்து ஊடுறுவி கண்டறியும்.

“பிற கோள்களில் உயிர்கள் உள்ளதா என்பதை உறுதியாக சொல்ல முடியாது,” என்கிறார் ஸ்ட்ரா. ஆனால் அண்டத்தில் உயிர்கள் வாழ்கிறதா என்ற தேடலின் அடுத்த கட்டம் இந்த தொலைநோக்கி என்பதை நான் உறுதியாக சொல்வேன்.

“இந்த வெப் தொலைநோக்கி மூலம் நட்சத்திரங்கள் குறித்தும் நாம் இரவில் பார்க்கும் வானம் குறித்தும் நமக்கு ஒரு புதிய பரிமாணம் கிடைக்கும்.” என்கிறார் ஸ்ட்ரா.

“மனிதர்கள் அனைவரும் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வெடித்து சிதறிய நட்சத்திரத்தின் எச்சங்கள். நாம் பிரபஞ்சத்துடன் தொடர்புடையர்வர்கள். இதை நாம் எப்போதும் நினைத்து பார்க்க வேண்டும். ஒரு அடி பின் சென்று வாழ்க்கை குறித்த இந்த பரிணாமத்தை நாம் யோசிப்பது நல்லது.” என்கிறார் ஸ்ட்ரா.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!