மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது’ என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை போயஸ் கார்டனில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான வீடு ஒன்று உள்ளது. இந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு கடந்த அ.தி.மு.க அரசு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. இதற்காக ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் உள்ள பொருள்களைக் கணக்கிடும் பணிகள் நடந்தன. தொடர்ந்து சட்டம் இயற்றப்பட்டு வேதா இல்லத்தையும் அங்குள்ள அசையும் சொத்துகளையும் கடந்த அ.தி.மு.க அரசு அரசுடமையாக்கியது.
தமிழ்நாடு அரசின் இந்தச் சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் வாரிசுகளான ஜெ.தீபாவும் தீபக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
மேலும், வேதா இல்லத்துக்கு அரசு சார்பில் இழப்பீட்டுத் தொகையாக ரூ.67 கோடியே 90 லட்ச ரூபாயை நிர்ணயிக்கப்பட்டதை எதிர்த்தும் இந்த வழக்கை தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து வந்தது. ஜெயலலிதா வசித்து வந்த வேதா இல்லம் என்பது தனிநபர் சொத்தாக இருப்பதால் அதனைக் கையகப்படுத்துவதற்கு அரசுக்கு அதிகாரம் இல்லை’ எனவும் மனுதார்கள் தரப்பில் வாதிட்டனர்.
மேலும், வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தங்களிடம் ஆலோசிக்காமல் நிலம் கையகப்படும் அதிகாரி இழப்பீட்டுத் தொகையை மாவட்ட நீதிமன்றத்தில் செலுத்தியது தவறு’ என்றும் வேதா இல்லத்தை அரசுடைமையாக்கி பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை செல்லாததாக அறிவிக்க வேண்டும்’ எனவும் தீபா, தீபக் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அதேநேரம், அரசுத் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இல்லத்தைக் கையகப்படுத்துவதற்கு முன்னதாக அனைத்து தரப்பினரின் கருத்துகளைக் கேட்டதாகவும் அரசியல்ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் பல்வேறு பிரச்னைகளை ஜெயலலிதா எதிர்கொண்ட காலங்களில் மனுதார்கள் அவருக்கு உறுதுணையாக இருந்ததில்லை எனவும் கூறப்பட்டது.
இந்த வழக்கில் அரசுத் தரப்பு மற்றும் மனுதாரர் தரப்பு வாதங்களைப் பதிவு செய்த நீதியரசர் சேஷசாயி, தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தார். இந்நிலையில், வேதா இல்லத்தை அரசுடைமையாக்கிய அரசின் உத்தரவு செல்லாது’ என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தீபா, தீபக்கிடம் மூன்று வாரங்களுக்குள் வேதா இல்லத்தை ஒப்படைக்கவும் சென்னை மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேதா இல்லம் மற்றும் மெரினாவில் உள்ள பீனிக்ஸ் நினைவிடம் என ஜெயலலிதாவுக்கு இரண்டு நினைவிடங்கள் எதற்கு?’ எனவும் நீதிபதி சேஷசாயி தீர்ப்பில் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.