‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ தயாரிப்பில் ஜீவா நடிக்கும் படத்துக்கு ‘வரலாறு முக்கியம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
‘லிங்கா’ படத்தின் கதாசிரியரான பொன் குமரன் இயக்கி வரும் படம் ‘கோல்மால்’. இப்படத்தில் ஜீவா, மிர்ச்சி சிவா இணைந்து நடிக்கின்றனர். இவர்களுடன் பாயல் ராஜ்புட், தான்யா ஹோப், யோகி பாபு, ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். முழு காமெடி படமாக உருவாகிவரும் இதன் படப்பிடிப்பு மொரீஷியஸில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அறிமுக இயக்குநர் சந்தோஷ் ராஜன் எழுதி இயக்கியுள்ள ஒரு புதிய படத்தில் ஜீவா நடித்து முடித்துள்ளார். ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ தயாரித்துள்ள இப்படத்துக்கு ‘வரலாறு முக்கியம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
இதில் ஜீவாவுடன் காஷ்மீரா பர்தேஷி, பிரக்யா நாகரா, விடிவி கணேஷ்,கே.எஸ். ரவிக்குமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மலையாள இசையமைப்பாளர் ஷான் ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைக்க, சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார்.
சென்னை, கோயம்புத்தூர், ஹைதராபாத் மற்றும் கேரளா ஆகிய இடங்களில் ஏற்கெனவே படப்பிடிப்புப் பணிகள் முடிந்துவிட்ட நிலையில், இறுதிகட்டப் பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. விரைவில் இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிடவுள்ளது.