செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அனுப்பியுள்ள இன்சைட் லேண்டர் பதிவு செய்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
இது 4.2 ரிக்டர் அளவு கொண்ட அரை மணி நேர நீண்ட ஒரு நிலநடுக்கம் செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்டதாக நாசா கூறி உள்ளது. இது கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஏற்பட்ட மூன்றாவது நிலநடுக்கம் இதுவாகும்.
இதற்கு முன்பு, ஆகஸ்ட் 25 அன்று 4.2 மற்றும் 4.1 ரிக்டர் அளவு கொண்ட இரண்டு நிலநடுக்கங்களை இன்சைட் லேண்டர் பதிவு செய்து உள்ளது. இருப்பினும், சமீபத்திய நிலநடுக்கம் முந்தைய பதிவுகளை விட ஐந்து மடங்கு வலிமையானது என்று நாசா கூறி உள்ளது.
2019-ல் 3.7 ரிக்டர் நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது. தற்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது இன்சைட் லேண்டர் கிட்டத்தட்ட 8,500 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. நீண்ட தூரத்திலிருந்து ஒரு பெரிய அதிர்வைக் கண்டறிந்தது இதுவே முதல் முறையாகும். நாசா விஞ்ஞானிகள் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதியைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.