செஸ் ஒலிம்பியாட் 2022 சென்னையில் நடைபெறவுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகள் இந்த ஆண்டு சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை சென்னையில் இப்போட்டி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் 2022 சதுரங்கப் போட்டியில் சென்னையில் நடத்துவதற்கான ஏலத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ரஷ்ய -உக்ரைன் போர் காரணமாக செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டியை ரஷ்யாவிலிருந்து வெளியேற்றுவதற்காக FIDE அறிவித்ததால் இப்போட்டி எந்த நாட்டில் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த சூழலில் சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் அறிவிப்பில் இருந்து 10 நாட்களுக்குள் ஏலம் பெறுவதற்கான கோரிக்கையுடன் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு, முதல்வர் அலுவலகத்தை அணுகி நிலையில் இதற்கான அனைத்து ஒப்பந்தங்களும் தமிழக அரசின் வாயிலாக வழங்கப்பட்டது. கடந்த 1977ஆம் ஆண்டு முதல் இப்போட்டி நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 43 செஸ் ஒலிம்பியாட் சர்வதேச போட்டிகளில் ஒரு முறை கூட இந்தியாவில் நடைபெறவில்லை. ஆனால் தற்போது 44வது சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பு செஸ் ஒலிம்பியாட் 2022 தற்போது இந்தியாவில் அதிலும், தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெறுகிறது. 200 நாடுகளை சேர்ந்த 2000 போட்டியாளர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.
இதுகுறித்து முதல்வர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் , “44வது செஸ் ஒலிம்பியாட் 2022 தொடரை இந்தியாவில் செஸ் தலைநகரான சென்னை நடத்த உள்ளதை பெருமகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். இது தமிழ்நாட்டுக்கு பெருமை தரும் தருணம். உலகம் முழுவதும் உள்ள செஸ் விளையாட்டின் அரசர்களை வரவேற்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.