தமிழகம்

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: சுரங்கப் பாதை பணிகள் விரைவில் தொடக்கம்

66views

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் சுரங்கப் பாதை அமைப்பதற்கான நிறுவனங்களைத் தேர்வு செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

எனவே, விரைவில் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

சென்னையில் தற்போது இரு வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுகிறது. பொதுமக்களின் தேவையைக் கருத்தில்கொண்டு, சென்னையில் இரண்டாவது கட்டமாக மாதவரம்-சிறுசேரி, மாதவரம்-சோழிங்கநல்லூர், பூந்தமல்லி-விவேகானந்தர் இல்லம் என மூன்று வழித்தடங்களில் மொத்தம் 119 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கான திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தேர்வு செய்யப்பட்ட வழித்தடங்களில் தடுப்புகள் அமைத்து, சாலைகளைத் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் அடிப்படை கட்டுமானப் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, ”சென்னையில் இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் திட்டம் துரிதமாக நடைபெறும் வகையில், தனியார் நிறுவனங்களைத் தேர்வு செய்து, உடனுக்குடன் பணிகள் தொடங்கப்படுகின்றன.

ஒரே நிறுவனத்துக்கு அதிக பணிகளை அளிக்காமல், பல்வேறு நிறுவனங்களும் பிரித்து அளிக்கப்படுவதால், எவ்விதப் பாதிப்பும் இன்றி பணிகள் நடைபெறும்.

உயர்நிலைப் பாதையைக் காட்டிலும், சுரங்கப் பாதையில் தண்டவாளங்கள், ரயில் நிலையங்கள் அமைப்பதுதான் சற்று கூடுதல் பணியாக இருக்கும். ஓட்டேரி பட்டாளம், பெரம்பூர், அயனாவரம், புரசைவாக்கம், அடையாறு டிப்போ, இந்திரா நகர், தரமணி, திருவான்மியூர் உட்பட பல்வேறு இடங்களில் சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய உள்ளன.

எனவே, சுரங்கப் பாதை அமைப்பது, சுரங்கப் பாதையில் ரயில் நிலையங்களை அமைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, உரிய நிறுவனங்களைத் தேர்வு செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்தப் பணிகள் முடிந்தவுடன், அடுத்த சில மாதங்களில் கட்டுமானப் பணிகளும் தொடங்கப்படும். இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை ஏற்கெனவே திட்டமிட்டவாறு 2026-ம் ஆண்டில் முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்” என்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!