சுதிர்மன் கோப்பை பாட்மின்டனில் இந்திய அணி 1-4 என, தாய்லாந்திடம் தோல்வியடைந்தது.பின்லாந்தில், கலப்பு அணிகளுக்கான சுதிர்மன் கோப்பை பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் ‘நடப்பு சாம்பியன்’ சீனா, தாய்லாந்து, பின்லாந்து அணிகளுடன் இடம் பிடித்துள்ளது. இந்திய அணி, தனது முதல் போட்டியில் தாய்லாந்தை சந்தித்தது. ஆண்கள் இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் துருவ் கபிலா, அர்ஜுன் ஜோடி 21-18, 21-17 என, தாய்லாந்தின் சுபாக், கிட்டினுபாங் ஜோடியை வீழ்த்தியது. பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் மாளவிகா 11-21, 14-21 என, தாய்லாந்தின் போர்ன்பாவீ சோச்சுவாங்கிடம் தோல்வியடைந்தார்.
ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 9-21, 19-21 என, தாய்லாந்தின் குன்லவுத் விதித்சர்னிடம் வீழ்ந்தார். பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா, சிக்கி ரெட்டி, கலப்பு இரட்டையரில் இந்தியாவின் சாய் பிரனீத், தனிஷா கிராஸ்டோ ஜோடி ஏமாற்றின. முடிவில் இந்திய அணி 1-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இரண்டாவது போட்டியில் (செப்டம்பர் 27) இந்தியா, சீனா அணிகள் மோதுகின்றன.