செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரில், அந்த பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபாவை போலீசார் ஆஜர்படுத்தினர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய நீதிபதி அம்பிகா, அவரை ஜூலை 1-ந் தேதி வரை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து தற்போது அந்த பள்ளியின் முன்னாள் மாணவி சுஷ்மிதா என்பவரிடம் சுமார் 4 மணி நேரம் நடத்திய விசாரணைக்குப் பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரை கைது செய்துள்ளனர். ஏற்கனவே இன்று காலை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியில் சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. விஷ்ணு விசாரணை நடத்தினார்.
அவர் விசாரணை மேற்கொண்டிருந்த போதே, இரண்டு தனிப்படை போலீசார் அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைகள் கருணா, நீரஜ் மற்றும் முன்னாள் மாணவி சுஷ்மிதா ஆகிய 3 பேரையும் சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்திற்கு அழைத்து வந்தார்கள். அவர்களிடம் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விசாரணையின் முடிவில், முன்னாள் மாணவி சுஷ்மிதாவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர்.
சுஷில் ஹரி பள்ளியில் நடந்த பாலியல் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததாக ஏற்கனவே 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அதில் ஒரு வழக்கில் சுஷ்மிதாவின் பெயரும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி சுஷ்மிதாவை கைது செய்துள்ளனர்.
தற்போது அவரை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் 2 ஆசிரியைகளிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவர்கள் இருவரும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.