இந்த ஆண்டிற்கான சிறந்த இந்திய திரைப்பட ஆளுமைக்கான விருது, நடிகை ஹேமமாலினி மற்றும் பாடலாசிரியர் பிரசூன் ஜோஷிக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.ஆண்டுதோறும் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில், இந்திய திரைத் துறையில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு, சிறந்த ஆளுமைக்கான விருது வழங்கப்படுவது வழக்கம்.
நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோருக்கு இந்த விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான சிறந்த ஆளுமைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் கூறியதாவது: இந்த ஆண்டிற்கான சிறந்த இந்திய திரைப்பட ஆளுமைக்கான விருது, நடிகையும், மதுரா தொகுதி எம்.பி.,யுமான ஹேமமாலினி மற்றும் இந்திய திரைப்பட தணிக்கை குழு தலைவரும், பிரபல பாடலாசிரியருமான பிரசூன் ஜோஷிக்கும் வழங்கப்பட உள்ளது. கோவாவில் நடைபெற இருக்கும் 52வது சர்வதேச திரைப்பட விழாவில், இவர்கள் இருவருக்கும் இந்த விருது வழங்கி கவுரவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.