தமிழகம்

சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் தவறு நடந்தால் மைய கண்காணிப்பாளர், பள்ளி மீது நடவடிக்கை: புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு

39views

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தவறு நடந்தால் மைய கண்காணிப்பாளர், பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக சிபிஎஸ்இ பொதுத்தேர்வு மையங்களின் கண்காணிப்பாளர்களுக்கு, சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரோனா தொற்று சூழலில் 10,12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் 2 பருவங்களாக நடத்தப்படுகிறது. தேர்வெழுதும் மாணவர்களின் சுகாதார பாதுகாப்பு நலனைகருத்தில்கொண்டு தேர்வு மையங்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தில் இருந்து 14 ஆயிரமாக உயர்த்தப் பட்டுள்ளது.

இந்நிலையில், டிச.16 முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளதேர்வுகளின்போது கூடுதல் நடைமுறைகளைப் பின்பற்ற முடிவுசெய்யப்பட்டுள்ளது. அதன்படி, சிபிஎஸ்இ தலைமை அலுவலகத்தில் இருந்து தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு தேர்வு நாளில் காலை 10.45 மணிக்கு பாஸ்வேர்டு அனுப்பப்படும்.

காலக்கெடு நேரமான 10.45மணிக்குள் அனைத்து மாணவர்களும் தேர்வு மையத்தில் இருக்கிறார்களா என்பதை மைய கண்காணிப்பாளர் உறுதிப்படுத்த வேண்டும். ஒருவேளை ஏதேனும் ஒருமாணவர் தாமதமாக வந்தால் அந்தமாணவரை நன்கு பரிசோதிக்க வேண்டும். வினாத்தாள் உரிய நேரத்தில் அச்சடிக்கப்பட்டு மாணவர்களுக்கு விநியோகிக்கப்படு கிறதா என்பதை பள்ளி நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டியது அவ சியம்.

 

எதிர்பாராவிதமாக தேர்வு தாமதமாக தொடங்கினால் அதற்கு இணையாக மாணவர்களுக்கு கூடுதல் நேரம் தரப்படவேண்டும். தேர்வு நடந்து முடிந்த அதேநாளில் அந்த மையத்தில் வைத்து விடைத்தாள்களை மதிப்பீடும் செய்யும் முறை தற்போது நிறுத்தப்படுகிறது.

தேர்வு முடிந்த 15 நிமிடங்களில் மாணவர்களின் ஓஎம்ஆர் விடைத்தாள்களை மைய கண்காணிப்பாளர்கள், தேர்வு பார்வையாளர் முன்னிலையில் உறையில் வைத்து சீல் வைக்க வேண்டும். உறை மேல் மைய கண்காணிப்பாளரும், தேர்வு பார்வையாளரும் நேரத்தை குறிப்பிட்டு கையெழுத்திட வேண்டும். அதன்பிறகு அந்த உறையை மண்டல அலுவலகத்துக்கு அனுப்பவேண்டும்.

பொதுத்தேர்வு நியாயமாக நடத்தப்பட வேண்டும். தேர்வில்ஏதேனும் விதிமுறை மீறல்கள்கண்டறியப்பட்டால் மைய கண்காணிப்பாளர் மற்றும் பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!