சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 மாநிலங்களவை எம்.பி.க்கள்: நாடாளுமன்ற வளாகத்தில் இன்று முதல் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் ஆன 12 எம்.பி.க்கள் இன்று முதல் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
நாடாளுமன்றக் மழைக்கால கூட்டத் தொடரின்போது மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. மேஜையின் மீது ஏறி அவர்கள் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக ஆகஸ்ட் 11-ம் தேதி மாநிலங்களவையில் பேசிய அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தான் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாக மறுநாள் அவையில் கண்ணீர் விட்டார்.
இந்நிலையில் காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 12 எம்.பி.க்கள் மாநிலங்களவையிலிருந்து நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவர்கள், குளிர்காலக் கூட்டத்தொடர் முழுவதும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து சஸ்பெண்ட் ஆன 12 எம்.பி.க்களும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு நேற்று எடுக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
இந்த விவகாரத்தில் சஸ்பெண்ட் ஆன 12 எம்.பி.க்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் கோருகின்றனர். ஆனால் நாங்கள் ஏன் மன்னிப்புக் கேட்கவேண்டும்? மக்கள் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்பியதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டுமா? அது ஒருபோதும் நடக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.