உலகம்

சர்வதேச எல்லைகள் திறக்கப்பட்டதும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி: மலேசிய சுற்றுலாத் துறை இயக்குநர் தகவல்

61views

சர்வதேச எல்லைகள் திறக்கப்பட்டதும், மலேசியாவுக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அந்நாட்டின் சுற்றுலாத் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திலிருந்து மலேசியாவுக்கு சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் அனுப்பும் சுற்றுலா முகவர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

இதில், மலேசிய சுற்றுலாத் துறையின் தென் இந்தியா மற்றும் இலங்கைக்கான இயக்குநர் ரஸ்தி அப்துல் ரஷீம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மலேசிய சுற்றுலாத் துறையின் சலுகைகள், புதிய சுற்றுலா தலங்கள், கரோனா பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

பின்னர் ரஸ்தி அப்துல் ரஷீம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரோனா தொற்று காரணமாக உலக நாடுகளின் சுற்றுலாத் துறை கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. ஆனால், இந்த இடைவெளியை மலேசியா அரசு சாதகமாக்கியுள்ளது.

அதாவது, நாடு முழுவதும் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் மறுசீரமைக்கப்பட்டும், பல கோடி செலவில் புதிய தலங்கள் உருவாக்கப்பட்டும் உள்ளன. இது சர்வதேச சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளன.

இதனால், இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பயணிகள் மலேசிய சுற்றுலாத் துறையைத் தொடர்ந்து அணுகி வருகின்றனர். ஆனால், துரதிர்ஷ்டவிதமாக தற்போது ஒமைக்கரான் வைரஸ் வேகமாகப் பரவி வருவதால், பல நாடுகளின் எல்லைகள் மீண்டும் அடைக்கப்பட்டுள்ளன.

எனவே, வைரஸின் தாக்கம் குறைந்து, சர்வதேச எல்லைகள் திறக்கப்பட்டதும், மலேசியாவுக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல, இந்தியாவிலிருந்து மலேசியாவுக்குச் செல்ல சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பித்த 48 மணி நேரத்தில் உரிய அனுமதி கிடைக்கும் வகையில் சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ள நபர்கள் https://malaysiavisa.imi.gov.my/என்ற இணையதளம் மூலமாக விசா பெற விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், மலேசிய சுற்றுலாத் துறை விளம்பரப் பிரிவு மேலாளர் எம்.சி.கவிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!