கடந்த ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்கத் தேர்தலுக்குப் பிறகு திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, 3-வது முறையாக முதல்வராக பதவியேற்றார்.
இந்த வெற்றிக்குப் பிறகு மம்தா தனது தேசிய அரசியலில் கவனம் செலுத்தத் தொடங்கினார். அதன்படி கோவா தேர்தலில் அவரது திரிணமூல் கட்சி, எம்ஜிபி உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் எம்ஜிபி 2 இடத்தில் வென்ற நிலையில் திரிணமூல் ஓரிடத்தில்கூட வெற்றி பெறவில்லை.
மேற்கு வங்க தேர்தலில் திரிணமூல் காங்கிரஸுக்கு தேர்தல் வியூகம் அளித்த பிரசாந்த் கிஷோர் மற்றும் அவரது ஐ-பேக் நிறுவனம், கோவா தேர்தலிலும் அக்கட்சிக்காக பணியாற்றியது. இந்நிலையில் பல மாநிலங்களில் தான் சார்ந்த கட்சிக்கு வெற்றி தேடி தந்த பிரசாந்த் கிஷோருக்கு கோவா தோல்வி பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
திரிணமூல் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கூறும்போது, வெறும் 5 சதவீத வாக்குகளை மட்டுமே கட்சி பெற்றுள்ளது. கட்சி செயல்பாடுகளை பிரசாந்த் கிஷோர் சீர்குலைத்ததே இதற்கு காரணம்’ என்றரா். திவிம் தொகுதி எம்எல்ஏ கிரண் கண்டோல்கரை மாநிலத் தலைவராக முன்னிறுத்த திரிணமூல் முடிவு செய்தது. ஆனால் இந்த முடிவு தாமதமாக அமைந்ததுடன் சாதகமற்ற பின்விளைவைவும் ஏற்படுத்தியது.