கோவாக்சின் தடுப்பூசியின் மாநில அரசுகளுக்கான கொள்முதல் விலை ரூ. 400 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா பரவல் மிகவும் தீவிரமாக உள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு உலக அளவில் முதல் இடத்தில் உள்ளது. நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 3.86 லட்சத்துக்கும் மேல் பாதிக்கப்பட்டு தினசரி கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
தற்போது கொரோனா தடுப்பூசி 3 கட்டமாக மே 1 முதல் 18 வயதைத் தாண்டிய அனைவருக்கும் போடப்பட உள்ளது. மேலும் இதற்காக கொரோனா தடுப்பூசி மருந்தை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடையே இருந்து மாநில அரசுகளும் தனியாரும் நேரடி கொள்முதல் செய்யலாம் எனவும் அதற்கான விலையை நிறுவனங்கள் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.
இதையொட்டி கோவிஷீல்ட் மருந்து மத்திய அரசுக்கு ரூ.150, மாநில அரசுகளுக்கு ரூ.400 மற்றும் தனியாருக்கு ரூ.600 என அந்த மருந்து தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் விலையை அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் தற்போது இந்த நிறுவனம் மாநில அரசுகளுக்கான கொள்முதல் விலையை ரூ.300 ஆகக் குறைத்துள்ளது.
கோவாக்சின் மருந்தைத் தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் மத்திய அரசுக்கு ரூ.150 மாநில அரசுகளுக்கு ரூ.600 மற்றும் தனியாருக்கு ரூ.1200 என விலையை நிர்ணயம் செய்து அறிவித்தது. நேற்று இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாநிலங்களுக்கான கொள்முதல் விலையை ரூ. 400ஆக குறைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கோவிஷீல்ட் அனைத்து கட்ட பரிசோதனை முடிவுகளும் வெளியாகி அதன் பிறகு மத்திய அரசு இந்த மருந்துக்கு ஒப்புதல் அளித்தது. ஆனால் கோவாக்சின் மூன்றாம் கட்ட பரிசோதனையின் முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில் மத்திய அரசு இந்த மருந்துக்கு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
கோவாக்சின் முதல்கட்ட சோதனையில் சிறந்த பலன் கிடைத்துள்ளது! பாரத் பயோடெக் முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி பெறும் 30 கோடி பயனர்கள் யார் யார்? அடையாளம் காணுவதில் அரசு தீவிரம். 50சதவிகித விலையில், ஜனவரி, பிப்ரவரியில் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி கிடைக்கும்!