கோயில் இடங்களுக்கான வாடகையை இணைய வழியில் செலுத்தும் வசதியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
கோயில் இடங்களுக்கான வாடகையை இணைய வழியில்செலுத்தும் வசதியை இந்து சமயஅறநிலையத் துறை தொடங்கியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத் துறை அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், இந்த புதிய வசதியை துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கோயில் நிலங்களின் வாடகைதாரர்கள், குத்தகைதாரர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வாடகை,குத்தகை தொகையை இணையதளம் மூலமாக செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இணைய வழியில் செலுத்த முடியாதவர்கள் கோயிலுக்கு நேரில் சென்றும் கட்டலாம். வாடகை, குத்தகை செலுத்த மாதம்தோறும் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இது தற்போது 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கோயில் இடங்களுக்கு நியாயமான வாடகை நிர்ணயிக்க விரைவில் குழு அமைக்கப்பட உள்ளது.
மத்திய அரசின் வழிகாட்டுதல்படியே கரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே, பாஜக போராடுவது என்றால் மத்திய அரசுக்கு எதிராகத்தான் போராட வேண்டும். நூறு பாஜக வந்தாலும் தமிழக அரசை ஸ்தம்பிக்க வைக்க முடியாது.
பெரும்புதூர் அருகே உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சொந்தமான இடம், நீதிமன்ற அறிவுறுத்தலின்படி குறிப்பிட்ட கெடுவுக்குள் மீட்கப்படும். ‘அந்த இடத்தை மீட்டால் அறநிலையத் துறை பற்றி இனி பேசமாட்டேன்’ என்று ஒருவர் கூறினார். இனிமேல் அவர் பேசாமல் இருப்பாரா என்று கேட்க வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளாக கோயிலுக்கு வரும் பலமாற்று பொன் இனங்கள், உண்டியலுக்கு வரும் நகைகள் பயன்பாடின்றி கட்டி வைக்கப்பட்டுள்ளன. சுவாமிக்கு பயன்படுவது தவிர்த்து மற்ற நகைகளை உருக்கி, வங்கி வைப்பு நிதியில் வைக்க திட்டமிட்டுள்ளோம். பழங்கால நகைகள் உருக்கப்படாது.
கோயில் தங்க நகைகளை உருக்கும் திட்டம் 1976-ம் ஆண்டுமுதல் உள்ளது. திருப்பதியில்கூட இந்த நடைமுறை உள்ளது. ரங்கம், சமயபுரம் கோயில்களில் ஏற்கெனவே நகைகளை உருக்கி,வைப்பு நிதியில் வைக்கப்பட்டுள்ளன. இதை சிலர் கண்மூடித்தனமாக எதிர்க்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் இணைஆணையர் த.காவேரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.