கேரளா முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் இன்று பதவியேற்பு- 21 அமைச்சர்களும் பதவியேற்கின்றனர்
கேரளா முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் இன்று மாலை 3.30 மணிக்கு பதவியேற்கிறார். அவருடன் 21 அமைச்சர்களும் இன்று பதவியேற்கின்றனர்.
140 இடங்களை கொண்ட கேரளா சட்டசப்பை தேர்தலில் இடதுசாரிகள் முன்னணி அமோக வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று மாலை 3.30 மணிக்கு கேரளா முதல்வராக பினராயி விஜயன் மீண்டும் பதவியேற்கிறார்.
அவருடன் 3 பெண்கள் உட்பட 21 பேர் கொண்ட அமைச்சரவையும் இன்று பதவியேற்கிறது. அனைவருக்கும் ஆளுநர் ஆரிப் முகமது கான் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த பதவியேற்பு விழாவுக்கு 500 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கேரளா அமைச்சரவையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கபடவில்லை. இது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
பினராயி விஜயன் அமைச்சரவையில் திருச்சூர் முதல் பெண் மேயராக இருந்த பேராசிரியர் பிந்து, பத்திரிகையாளர் வீணா ஜார்ஜ், தடகள வீராங்கனை சின்சு ராணி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் சின்சு ராணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் முதல் பெண் அமைச்சர் சின்சு ராணி.