கேரள மாநிலத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி நேற்று தனது ட்விட்டர் பதிவில், ‘கேரளாவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. கரோனா தொடர்பான அனைத்து பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை அம்மாநிலத்தின் சகோதர சகோதரிகள் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து உங்கள் நலனை கவனித்துக் கொள்ளுங்கள்’ என்று கூறியுள்ளார்.
கேரளாவில் கடந்த வியாழக்கிழமை புதிதாக 22,064 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. கரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் விகிதம் 13.53 சதவீதமாக உயர்ந்தது. மேலும் சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 50,040 ஆகவும், உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 16,457 ஆகவும் இருந்தது.