கெய்ல் பீல்டிங் செய்ததை பார்த்து, ரசல் சிரித்து மகிழ்ந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
ஐ.பி.எல்., தொடரில் பஞ்சாப்-கோல்கட்டா அணிகள் மோதிய லீக் போட்டி ஆமதாபாத் மோடி மைதானத்தில் நடந்தது. பஞ்சாப்பின் (123/9) இலக்கைத் துரத்திய கோல்கட்டா அணி துவக்கத்தில் மூன்று விக்கெட்டுகளை இழந்து திணறியது. பின் கேப்டன் மார்கன், திரிபாதி இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இப்போட்டியில் பஞ்சாப் அணியின் 41 வயது ‘சீனியர்’ வீரர் கெய்ல், துடிப்பாக பீல்டிங் செய்து அசத்தினார். ஷமி வீசிய (3.2வது ஓவர்) பந்தை மார்கன் ‘லெக்’ திசையில் அடித்தார். இதை வலது பக்கமாக ‘டைவ்’ அடித்து பிடித்த கெய்ல், பவுலர் பக்கம் இருந்த ‘ஸ்டம்சை’ தகர்த்தார். அதிர்ஷ்டவசமாக திரிபாதி தப்பினார். அடுத்து ஜோர்டன் வீசிய (7.2வது) பந்தை, ‘மிட் விக்கெட்’ பகுதியில் அடித்தார் திரிபாதி. அங்கு நின்றிருந்த கெய்ல், இடது புறமாக பாய்ந்து பந்தை பீல்டிங் செய்து கலக்கினார். இதை களத்துக்கு வெளியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த கோல்கட்டா வீரர் ஆன்ட்ரி ரசலுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. முகத்தை கைகளால் மூடிக்கொண்டு சிரித்து மகிழ்ந்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆக பரவி வருகிறது.