இந்தியா

கிராமப்புற மேம்பாட்டுக்கு நிதிப்பற்றாக்குறை கிடையாது: பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டம்

66views

கிராமப்புற மேம்பாட்டு திட்டங்களுக்கு நிதிப் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கிராமப்புற பொருளாதாரத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தொடர்பாக காணொலி மூலம் நேற்று நடைபெற்ற விவாதத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

கிராமப்புறங்களை உள்ளடக்கிய திட்ட செயல்பாட்டுக்கென புதிய உத்திகள் வகுக்கப்பட்டுள்ளன. வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் கிராமப்புற மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மேம்பாட்டுக்கு தேவையான நடவடிக்கைகளை அரசு அதிகாரிகள் எடுக்க வேண்டும். கிராமங்களில் அதிக எண்ணிக்கையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாக வேண்டும். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும். அத்துடன் நாட்டின் வடகிழக்குப் பிராந்தியம், எலைப்பகுதிகளில் உள்ள மாவட்டங்களின் மேம்பாட்டுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

அரசின் எந்தவொரு செயல்திட்டமும் காலக்கெடுவுடன் மேற்கொள்ளப்படுகிறது. அனைத்துமாநில அரசுகளும் காலக்கெடுவுடன் திட்டப் பணிகளை மேற்கொள்ளுமாயின் அதனால் கிராமப்புற மக்கள் பயனடைவர்.

இந்த பட்ஜெட்டில் அனைவருக்கும் வீடு திட்டத்துக்காக ரூ.48 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 6 நகரங்களில் கட்டுபடியாகும் விலையில் இலகு ரக வீட்டு வசதி திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதன்படி 1,000 வீடுகள் சர்வதேச தொழில்நுட்பத்தின்படி அதற்குரிய உபகரணங்களுடன் உருவாக்கப்படும்.

ஜல்ஜீவன் திட்டத்தின்படி இந்தஆண்டு இறுதிக்குள் 4 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர்வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்துமே நிர்ணயிக்கப்பட்ட காலக் கெடுவுடன் நிறைவேற்றப்படும், இதில் எந்த ஒரு குடிமகனும் விடுபட்டு விடக்கூடாது என்பதில் அரசு தெளிவாகவும் உறுதியுடனும் உள்ளது.

கிராமப்புற மேம்பாட்டு திட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் கிராமப் பகுதிகளுக்குச் சென்று அப்பகுதி மேம்பாட்டுக்குத் தேவையான நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். ஒருங்கிணைந்த வகையில் கிராம மேம்பாட்டுக்கான திட்டப் பணியாக அது நிறைவேற்றப்பட வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ரசாயன உரம் இல்லாத இயற்கைவேளாண் சாகுபடியில் குறைந்தபட்சம் 50 விவசாயிகளை உருவாக்குவதே கிருஷி விக்ஞான் கேந்திரத்தின் நோக்கம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!