ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் துப்பாக்கிச் சூடு மற்றும் அதனை தொடர்ந்து நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 19 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சர்தார் முகமது தாவுத் கான் ராணுவ மருத்துவமனை (Sardar Mohammad Daud Khan military hospital ) இயங்கி வருகிறது. இதன் அருகே இன்று காலை இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலும் இதை தொடர்ந்து துப்பாக்கிச் சூடு சம்பவமும் நிகழ்ந்தது. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
வெடிகுண்டுகள் வெடித்ததில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 43 பேர் காயமடைந்தனர் என்று உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாக அல் ஜசீரா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதேபோல், சர்தார் முகமது தாவுத் கான் மருத்துவமனையின் மருத்துவர் AFP ஊடகத்திடம், “நான் மருத்துவமனை உள்ளே இருக்கிறேன். முதல் சோதனைச் சாவடியிலிருந்து பெரிய வெடிச் சத்தம் கேட்டது. பாதுகாப்பான அறைகளுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டோம். துப்பாக்கிச் சூடு சத்தமும் கேட்கிறது, “என்று கூறியுள்ளார்.
இந்த தாக்குதல்களுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அதேவேளையில், ஐ.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் மருத்துவமனைக்குள் சென்றதாகவும் தாலிபான் படைகளுடன் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் கைப்பற்றினர். அதை தொடர்ந்து பல்வேறு தாக்குதல்களில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் ஈடுபட்டு வருகிறது.