கோவில்களுக்கு காணிக்கையாக வந்த நகைகளை உருக்குவது தொடர்பாக முடிவெடுக்கக் கூடாது என்ற உத்தரவை, மேலும் ஆறு வாரங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.சென்னையைச் சேர்ந்த, ‘இண்டிக் கலெக்டிவ்’ அறக்கட்டளை தலைவர் டி.ஆர்.ரமேஷ் தாக்கல் செய்த மனு:கோவில்களில் உள்ள நகைகளை உருக்குவது தொடர்பாக, அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவில் நிர்வாகம் தொடர்பாக, அறங்காவலர்கள் குழு தான் முடிவெடுக்க வேண்டும்.கடந்த 10 ஆண்டுகளாக கோவில்களுக்கு வந்த நகைகளை உருக்கி, கட்டிகளாக மாற்றி, வங்கிகளில் டிபாசிட் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.நகைகளை பாதுகாக்கும்படி, அறங்காவலர்களுக்கு ஆணையர் அறிவுறுத்தலாம். நகைகளை உருக்கும்படி உத்தரவிட முடியாது.தமிழகத்தில், ஏராளமான கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை. அறநிலையத் துறை ஊழியர்கள், தக்காராக பணியாற்றுகின்றனர். அவர்களால் கொள்கை முடிவு எடுக்க முடியாது.
எனவே, அறநிலையத் துறை கமிஷனரின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்; ரத்து செய்ய வேண்டும். நகைகளை உருக்குவதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை விசாரித்த, அப்போதைய தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய ‘முதல் பெஞ்ச்’ ‘காணிக்கை நகைகள் மற்றும் இதர பொருட்கள் கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ளலாம்.ஆனால், அறங்காவலர்கள் இன்றி, நகைகளை உருக்குவது தொடர்பான முடிவை எடுக்கக் கூடாது’ என உத்தரவிட்டது.இவ்வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, நகைககள் கணக்கெடுப்பு பணி நடப்பதாகவும், அறங்காவலர்களை நியமிப்பதற்கான நடைமுறைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை ஆறு வாரங்களுக்கு தள்ளி வைத்த முதல் பெஞ்ச், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை நீட்டிப்பதாகவும் தெரிவித்தது. இதற்கிடையில், அர்ச்சகர்கள் நியமனத்துக்கான விதிகள் மற்றும் அர்ச்சகர்கள் நியமனத்தை எதிர்த்த மனுக்களும், நேற்று முதல் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தன. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை, ஜனவரிக்கு முதல் பெஞ்ச் தள்ளிவைத்தது.