347
கலைஞர் கருணாநிதி.
தமிழகத்தின் விடியலுக்கான ஒரு மாபெரும் தலைவரின் பெயர்.
தனித்தனி பகுதிகளாகவும் தனித்தனி மன்னர்களாகவும் ஆட்சியிலிருந்த தமிழகத்தின் பல பகுதிகள் தனித்துவமாக இருந்தன. இதைப்போலவே இந்தியாவின் பல பகுதிகளும் பல்வேறு மன்னர்களால் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன.
வியாபார நிமித்தமாக இந்தியா வந்த மேற்கத்திய வியாபாரிகள் சிறு குறு மன்னர்களை தங்கள் வசப்படுத்தி நாட்டை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டுவந்தார்கள் என்பது நாம்; அறிந்த வரலாறு .
அவ்வாறு பல்வேறு மன்னர்களால் ஆளப்பட்ட பகுதிகள் ஒவ்வொன்றிலும் வாழ்ந்த மக்கள் ஒவ்வொரு பண்பாடு கலாச்சாரத்தை பின்பற்றி வாழ்ந்து வந்தனர். அந்தந்த பகுதிகளில் உள்ள வளமும் அதற்கேற்றாற் போல இருந்து வருகிறது. மொழியும் அதன்படிதான் இருக்கிறது. ஆனால் ஒருங்கிணைந்த இந்தியாவாக மாற்றியபின் ஆங்கிலேயர்களை துரத்தியடிக்க இந்தியாவில் வாழும் அனைத்து மொழியினரும் பல்வேறு மதத்தினரும் ஒருங்கிணைந்தனர். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பு மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் தன் தனித்திறமையோடு தனிநடை போட்டது. ஆனால் மத்திய ஆளும் கட்சியினர் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஹிந்தி மொழியை திணித்த போது அறிஞர் அண்ணா தலைமையிலான திமுக மாபெரும் போராட்டத்தை மேற்கொண்டு தமிழின் தன்மானத்தை நிலைநிறுத்தியது.
இந்த வரலாற்றை நாம் திரும்பிப்பார்க்கக் காரணம் தமிழக்த்தின் தனித்தன்மையை நிலைநிறுத்த பாடுபட்ட தலைவர் கலைஞர்.
தமிழக மண்ணுக்கு தனித்தன்மை உண்டு. அதைகட்டிக்காப்பாற்றியவர் கலைஞர் கருணாநிதி.
கலைஞர் சிறு குறிப்பு:
தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை என்னும் சிறு கிராமத்தில் 03 Jun 1924 பிறந்தார் கருணாநிதி.
தனது 14வயதிலேயே பல்வேறு சமூக இயக்கங்களில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டு அரசியலில் நுழைந்தார். தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிரான பல்வேறு போராட்டங்களுக்கு மூல காரணமாக இருந்தவர் கருணாநிதி.
இவர் 1942 ல் துவக்கிய முரசொலி பத்திரிகை பின்னாளில் திமுக கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையானது.
ஒருபுறம் முழுநேர அரசியல்வாதியாக இயங்கிக்கொண்டிருந்தாலும்,இசை, எழுத்து மற்றும் சமூக செயல்பாடுகளில் மிகுந்த ஆர்வமாகவும், ஈடுபாட்டுடனும் இருந்தார் கருணாநிதி.
தமிழ் திரையுலகிலும் கவனம் செலுத்தி பல்வேறு திரைப்படங்களில் வசனகர்த்தாவாக தனது திராவிட சித்தாந்தங்களை பரப்பினார். இவரது முதல் படமான இராஜகுமாரி 1947லிலும், கடைசிபடம் பொன்னர் சங்கர் 2011லிலும் வெளியானது. திருக்குறள் உரை, சங்கத்தமிழ், குறளோவியம்,தென்பாண்டி சிங்கம், ரோமாபுரி பாண்டியன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட உரைநடை மற்றும் இலக்கிய நூல்களை எழுதியுள்ளார். தூக்குமேடை, மணிமகுடம், நானே அறிவாளி உள்ளிட்ட மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார்.
ஐந்து முறை முதலமைச்சர் பதவி
ஐந்து ( 1969, 1971, 1989, 1996 & 2006) தடவை தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்று தமிழகத்தை வழிநடத்தினார்.
1957 குளித்தலை தொகுதியில் வென்று தமிழ்நாடு சட்டமன்றத்திற்குள் நுழைந்தார் கருணாநிதி.
1961 திமுக-வின் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.
1962 தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவர் ஆனார்.
1967 தமிழ்நாடு அரசின் பொதுபணித்துறை அமைச்சரானார் கருணாநிதி.
தமிழகத்தின் பெருமையை பறைசாற்றும் சான்றுகளை வரலாற்று சான்றுகளாக அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேரக்கும் வகையில், தெய்வப்புலவர் திருவள்ளுவரை நினைவு கூறும் வள்ளுவர் கோட்டம் சென்னையிலும் கன்னியாகுமரில் 133 அடி உயர வள்ளுவர் சிலையும் அமைத்தார். மன்னரை எதிர்கொண்டு துணிந்து நீதி கேட்ட கண்ணகிக்கு சென்னை மெரினா கடற்கரையில் சிலையும் அமைத்தார்.
07 ஆகஸ்ட் 2018ல் தனது 94வது வயதில் காலமானார் கருணாநிதி.
-
தொகுப்பு : வி.களத்தூர் கமால் பாஷா