கர்நாடகாவில் நடைபெறும் ஹிஜாப் பிரச்சினையை தேசிய பிரச்சினையாக மாற்ற வேண்டாம்: உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
கர்நாடகாவில் நடந்துவரும் ஹிஜாப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் உரிய நேரத்தில் தலையிட்டு, அரசமைப்பு உரிமையை பாதுகாக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பள்ளி கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் (முக்காடு), புர்கா (முழு நீள உடை) அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் வெடித்துள்ளது. பதிலுக்கு காவி துண்டு அணிந்து மாணவர்களும் பள்ளி, கல்லூரிக்கு வந்தனர். இதனால் சில இடங்களில் பதற்றம் ஏற்பட்டது. இதற்கிடையில், ஹிஜாப் அணிவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.
இதனால் ஹிஜாப் அணிய அனுமதிக்கக் கோரி முஸ்லிம் மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். இதை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, இவ்வழக்கில் தீர்ப்பு வெளியாகும் வரை கல்வி நிலையங்களில் ஹிஜாப், காவி துண்டு போன்ற மத ரீதியான உடைகளை அணிய தடை விதித்தார்.
இந்நிலையில் முஸ்லிம் மாணவிகள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வின் முன்னிலையில் நேற்று ஆஜராகி, ”ஹிஜாப் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உடனடியாக தலையிட்டு, அரசமைப்பு வழங் கிய உரிமைகளை பாதுகாக்க வேண்டும்” என வாய்மொழியாக முறையிட்டார்.
அதற்கு தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு, ”இவ்வழக்கை கர்நாடக மாநில உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. கர்நாடகா வில் என்ன நடக்கிறது என்பதை உச்ச நீதிமன்றம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்த விவகாரத்தில் உரிய நேரத்தில் தலையிட்டு, அரசமைப்பு உரிமைகளை உச்ச நீதிமன்றம் பாதுகாக்கும்.
எனவே ஹிஜாப் பிரச்சினையை தற்போதைக்கு தேசிய பிரச் சினையாக மாற்ற வேண்டாம். இந்த விவகாரத்தை உச்ச நீதி மன்றம் பார்த்துக் கொள்ளும்” என தெரிவித்தார்.
கர்நாடகாவில் உள்ள பீதர் தனியார் கல்லூரியில் பி.எஸ்சி நர்சிங் படிப்புக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. அதற்கு ஹிஜாப் அணிந்த முஸ்லிம் மாணவிகள் 8 பேரை அதிகாரிகள் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. இதையடுத்து அங்கு குவிந்த மாணவிகளின் உறவினர்கள் கல்லூரி நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தின் வீடியோ ஊடகங்களில் வைரலானது.