கரோனா சிகிச்சைக்காக நாக்பூரில் 80 படுக்கைகளுடன் ஜமாத்-எ-இஸ்லாமி ஹிந்தின் இலவச மருத்துவமனை: தேவேந்திர பட்னாவிஸ் பாராட்டு
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் 80 படுக்கைகளுடன் ஜமாத்-எ-இஸ்லாமி ஹிந்தின் சார்பில் இலவச மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. கரோனா சிகிச்சைக்கான இந்த மருத்துவமனையை பாஜக முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நேரில் வந்து பாராட்டியுள்ளார்.
இரண்டாவது அலையில் கரோனாவின் பாதிப்பு மகாராஷ்டிராவில் அதிகம். இதன் இரண்டாவது பெரிய நகரமான நாக்பூரிலும் கரோனா தொற்றாளர்கள் பெருகி வருகின்றனர். இதை ஒட்டியுள்ள மாநிலங்களான மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் இருந்தும் கரோனா நோயாளிகள் நாக்பூரில் சிகிச்சைக்கு வருகின்றனர். இதனால், நாக்பூர் நகர் முழுவதிலும் மருத்துவ அறிக்கைகளுடன் பொதுமக்கள் வலம் வருவது சாதாரணமாகிவிட்டது.
இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 8,000 கரோனா தொற்றாளார்கள் புதிதாக அறியப்படுகின்றனர். இதன் காரணமாக நாக்பூர், மகாராஷ்டிராவின் ‘ஹாட்ஸ்பாட்’ நகரமாகிவிட்டது.
இந்நிலையில், மருத்துவ சிகிச்சைகளின் தேவையும் அதிகரித்துள்ளது. இதைச் சமாளிக்க முஸ்லிம்களின் முக்கிய அமைப்பான ஜமாத்-எ-இஸ்லாமி ஹிந்த் பொதுநல அமைப்பும் களம் இறங்கியுள்ளது.
இந்த அமைப்பின் சார்பில் 80 படுக்கைகளுடன் கரோனா சிகிச்சைக்காக பாஞ்ச்பவுலி பகுதியில் ஒரு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இதை ஏப்ரல் 1இல் நாக்பூர் நகர மேயரான தயாசங்கர் திவாரி திறந்து வைத்தார்.
இதில், எந்த வித்தியாசம் பார்க்காமல் அனைத்து மதத்தினருக்கும் இலவச சிகிச்சை கிடைத்து வருகிறது. இதை கவுரவிக்கும் வகையில் நாக்பூரின் மேயரான திவாரி, மகாராஷ்டிராவின் பல முக்கிய தலைவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வந்து காட்டி வருகிறார்.
சில தினங்களுக்கு முன் இந்த மருத்துவமனைக்கு மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரான தேவேந்தர் பட்னாவிஸ் விஜயம் செய்திருந்தார். இவருடன் நாக்பூர் நகர மேயரான தயாசங்கர் திவாரியும் வந்திருந்தார்.
அப்போது ஜமாத்-எ-இஸ்லாமி ஹிந்தின் மருத்துவமனை குறித்து முன்னாள் முதல்வர் பட்னாவிஸ் கூறும்போது, ‘பொதுமக்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு உதவ முன்வரும் இதுபோன்றவர்கள்தான் இன்றைய சமூகத்தின் தேவை. தற்போதைய தீவிர கோவிட் சூழலில் மக்களுக்கு உதவ இந்த ஜமாத் அமைப்பினர் முன்வந்திருப்பது பாராட்டத்தக்கது. இதுபோல், நாட்டின் மற்ற சமூக அமைப்புகளும் மக்களுக்காக உதவ வேண்டும்’எனத் தெரிவித்தார்.
இது குறித்து ஜமாத்-எ-இஸ்லாமி ஹிந்தின் நாக்பூர் பொறுப்பாளரான டாக்டர் அன்வர் சித்திக்கீ கூறும்போது, ‘உயிருக்குப் போராடும் நிலையில் உள்ளவர்களுக்கு எங்கள் மருத்துவமனை உதவியாக உள்ளது. நோயாளிகளுக்கு இடையே பாரபட்சம் பார்க்காமல் ஆக்சிஜன் உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறோம்’எனத் தெரிவித்தார்.
தங்கள் வீடுகளிலும், வெளியிலும் சிகிச்சை பெறுபவர்களுக்குத் தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களும் இங்கு கிடைக்கின்றன. இதற்காக, அவர்களிடம் குறைவாக ரூ.500 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
நம் நாடு சுதந்திரம் அடைவதற்கும் முன்பாக இருந்த பழமையான அமைப்பு ஜமாத்-எ-இஸ்லாமி. இதிலிருந்து பிரிந்த ‘ஹிந்த் (இந்தியா)’என்பதைச் சேர்த்து 1948இல் உத்தரப் பிரதேசம், அலகாபாத்தில் உருவானது.