கடந்த ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து கரோனா வைரஸ் பாதிப்பால், தாய், தந்தையை இழந்து நாடுமுழுவதும் 577 குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கவலைத் தெரிவித்துள்ளார்.
நாடுமுழுவதும் கரோனா வைரஸ் 2-வது அலையில் மக்கள் ஏராளமான துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள், ஆயிரக்கணக்கில் உயிரிழக்கிறராக்ள். இதில் குழந்தைகளின் நிலை பரிதாபத்துக்குரியது.
கரோனா வைரஸால் பல மாநிலங்களில் பெற்றோர் இருவரையும் இழத்தல், தாய், தந்தை இருவரில் ஒருவரை இழத்தல் போன்ற பரிதாப நிலைக்கு குழந்தைகள் தள்ளப்படுகின்றனர். கரோனா வைரஸால் ஏற்கெனவே குழந்தைகளின் கல்விச் சூழல் மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில், குடும்பச்சூழலும் வேதனைக்குரியதாக மாறி குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விக்குரியதாக்குகிறது.
குழந்தைகளின் நிலையை உணர்ந்த ஏராளமான தன்னார்வ அமைப்புகள், மாநில அரசுகள் குழந்தைகளின் கல்விச் செலவு, குடும்பத்தில் வருமானம் ஈட்டுவோரை இழந்துவிட்டால் நிவாரண உதவிகளை அளித்து வருகின்றன.
அந்த வகையில்கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் இதுவரை நாட்டில் 577 குழந்தைகள் தாய், தந்தை இருவரையும் இழந்து ஆதரவற்றநிலைக்கு கரோனாவால் தள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து மத்திய பெண்கள், குழந்தைகள் நல அமைச்சர் ஸ்மிருதி இரானி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் ‘ கடந்த ஏப்ரல் 1ம்தேதி பிற்பகல் 2மணியிலிருந்து இதுவரை நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பால் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரேதசங்களில் தாய், தந்தை இருவரையும் இழந்து 577 குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த குழந்தைகளை காப்பாற்றி, ஆதரவு அளிக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது’ எனத் தெரிவித்தார்.
மத்திய குழந்தைகள் நல அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில் ‘ இந்த குழந்தைகள் ஆதரவற்றவர்கள் இல்லை. மாவட்ட அதிகாரிகளின் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். இந்த குழந்தைகளுக்குத் தேவையான கவுன்சிலிங் சேவையை வழங்க தேசிய மனநல மற்றும் நரம்பியல் அறிவியல் துறை தயாராக இருக்கிறது.
இந்த குழந்தைகளை பராமரிக்கவும், பாதுகாக்கவும் அமைச்சகத்துக்கு எந்தவிதமான நிதிப்பற்றாக்குறையும் இல்லை. மாநில அரசுகளுடனும், மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்பில் இருந்து தேவையான உதவிகளை வழங்கும். யுனிசெப் அமைப்புடன் ஆலோசனை நடத்தி தேவையான ஒத்துழைப்பும் வழங்கப்படுகிறது.
பெற்றோரை இழந்து குழந்தைகள் தனிமையில் வாடுவது துரதிர்ஷ்டமானது, வேதனைக்குரியது. தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் தொடர்பில் இருந்து வரும் அமைச்சகம் கரோனாவில் ஆதரவற்ற நிலைக்குச் சென்ற குழந்தைகள் விவரங்களை சேகரித்து வருகிறது ‘ எனத் தெரிவித்தனர்.
மத்திய மகளிர் நலத்துறை அமைச்சகத்தின் செயலர் ராம் மோகன் மிஸ்ரா கூறுகையில் ‘ இந்தியப் பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகளை கையாள்வதற்காக 9 நாடுகளில் 10 மையங்களை மத்திய அரசு அமைக்கிறது. பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர், சவுதி அரேபியால் இரு இடங்களில் இந்த மையங்கள் அமைக்கப்பட உள்ளன. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சார்பில் இந்த மையங்கள் இயக்கப்படும். நாடுமுழுவதும் 300க்கும் மேற்பட்ட மையங்கள் திறக்கப்பட உள்ளன’ எனத் தெரிவித்தார்.