கன்வர் யாத்திரைக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில், உயிர் வாழ்வதே மிக முக்கியம் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
பிகார், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆண்டுக்கு ஒரு முறை கன்வர் யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. கரோனா பெருந்தொற்று பரவிவரும் நிலையில், இந்த யாத்திரையை உத்தரகண்ட் அரசு ரத்து செய்தது.
இருப்பினும், ஜூலை 25ஆம் தேதி முதல் யாத்திரையை நடத்த உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அனுமதி வழங்கியுள்ளார். இவ்விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டது.
உத்தரப் பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.எப். நரிமன் தலைமையிலான அமர்வு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது, குடிமக்களின் உடல்நலனும் அவர்கள் உயிர் வாழ்வதே மிக முக்கியம் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
இதுகுறித்து நீதிமன்றம், “கரோனா காலத்தில் யாத்திரையானது சிறிய அளவில் நடத்தப்படுவதாக இருந்தாலும், அதனை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். மத உணர்வுகளாக இருந்தாலும் அது அடிப்படை உரிமைகளுக்கு கீழ் படிந்ததாகவே இருக்க வேண்டும்.
யாத்திரை நடத்தப்படுவது என்பது அனைவரையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. இதில், உத்தரப் பிரதேச அரசு மறுபரிசீலனை செய்ய தவறினால், உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனக் குறிப்பிட்டது.
தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே யாத்திரைக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என உத்தரப் பிரதேச அரசு தெரிவித்திருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இக்கருத்து தெரிவித்துள்ளது.