இந்தியா

“கட்டையை எடுத்து விவசாயிகளை அடிங்க” : பாஜக முதல்வரின் பேச்சால் சர்ச்சை!!

56views

போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு எதிராகக் கட்டைகளைக் கையில் எடுங்கள் என ஹரியானா முதல்வர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூர் பகுதியில் போராடிக் கொண்டிருந்த விவசாயிகள் மீது ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் கார் மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தற்போது நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் போராடிவரும் விவசாயிகளுக்கு எதிராகத் தடியைக் கையில் எடுங்கள் எனப் பேசிய வீடியோ ஒன்று வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம், பா.ஜ.க விவசாய பிரிவு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தான் முதல்வர் கட்டார் விவசாயிகளுக்கு எதிராக இந்த சர்ச்சை கருத்தைப் பேசியுள்ளார். அதில், “பா.ஜ.க விவசாயப் பிரிவினர் 1000 பேர் கொண்ட குழுவை அமையுங்கள். போராடும் விவசாயிகளைப் பழிவாங்கும் செயலை நீங்களும் செய்யுங்கள் என கூறினார்.

விவசாயிகளுக்கு எதிராகத் தடியெடுங்கள். இதனால் சிறைத்தண்டனை கிடைக்க நேரிட்டாலும் கவலைப்படாதீர்கள். நீங்கள் பெரிய தலைவர்களாவீர்கள். வரலாற்றில் உங்கள் பெயர் பொறிக்கப்படும் எனப் பேசியுள்ளார்.

இவரது இந்தப் பேச்சு இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முதல்வர் மனோகர்லால் கட்டாரின் வன்முறையைத் தூண்டும் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!