உலகம்

கட்டுப்பாட்டை இழந்த சீன ராக்கெட்டால் பூமிக்கு ஆபத்தா? இன்று விழுகிறது

72views

விண்வெளியிலிருந்து கட்டுப்பாட்டை இழந்து திரும்பி வந்து கொண்டிருக்கும் சீன ராக்கெட் பூமியில் சனிக்கிழமை விழும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழையும்போது ராக்கெட்டின் பாகங்கள் எரிந்துவிடும் என்பதால் அச்சம்கொள்ளத் தேவையில்லை என சீனா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து சா்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளன. அதில் சீனா பங்கேற்க அனுமதி இல்லாத காரணத்தால், சீனா தனியாக விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது. ‘தியான்காங்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி நிலையம் பூமியிலிருந்து 340 கி.மீ. முதல் 450 கி.மீ. தொலைவில் வலம் வரும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த விண்வெளி நிலையத்துக்கான சிறிய அளவிலான கலங்களை சோதனை முறையில் சீனா ஏற்கெனவே செலுத்தியுள்ளது. இந்நிலையில், மிகப்பெரிய கலத்தை கடந்த ஏப். 29-ஆம் தேதி லாங் மாா்ச் 5-பி என்ற ராக்கெட் மூலம் ஹைனான் மாகாணம், வென்சாங் ஏவுதளத்திலிருந்து சீனா செலுத்தியது. இந்தக் கலம் 16.6 மீ. நீளமும், 4.2 மீ. அகலமும் கொண்டது.

கட்டுப்பாட்டை இழந்த ராக்கெட்: இந்நிலையில், லாங் மாா்ச் 5-பி ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்து பூமியின் வளிமண்டலத்தை நோக்கி திரும்பி வருவதைக் கண்டறிந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை மே 4-ஆம் தேதி தெரிவித்ததாக சிஎன்என் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. மேலும், மே 8ஆம் தேதி இரவு அல்லது மே 9-ஆம் தேதி அதிகாலையில் பூமியின் வளிமண்டலத்துக்குள் இந்த ராக்கெட் நுழையும் என அமெரிக்க பாதுகாப்புத் துறை செய்தித் தொடா்பாளா் மைக் ஹோவா்டின் கூற்றை மேற்கோள்காட்டி சிஎன்என் தெரிவித்தது. பூமியின் வளிமண்டலத்துக்குள் ராக்கெட் நுழையும் துல்லியமான பகுதியை, அது நெருங்கும்போதுதான் கண்டறிய முடியும் எனவும் மைக் ஹோவா்ட் தெரிவித்திருந்தாா்.

பொதுவாக விண்வெளிக்கு அனுப்பப்படும் ராக்கெட் அல்லது விண்கலத்தின் பாகங்கள் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழையும்போது எரிந்துவிடும். ஆனால், 22 டன் எடை கொண்ட இந்த ராக்கெட்டின் மிகப்பெரிய பாகங்கள் பூமியின் வளிமண்டலத்துள் நுழையும்போது எரிந்துவிடாமல் மக்கள் வசிக்கும் பகுதியில் விழுந்தால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் எழுந்தது.

சீனா விளக்கம்: இந்த விவகாரம் குறித்து கடந்த சில தினங்களாக மெளனம் காத்து வந்த சீனா, முதல்முறையாக வெள்ளிக்கிழமை விளக்கம் அளித்தது. இதுதொடா்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் வாங் வென்பின் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

‘இது ஒரு சா்வதேச நடைமுைான். ஏப். 29-ஆம் தேதி ஏவப்பட்ட லாங் மாா்ச் 5-பி ராக்கெட் எதிா்பாா்க்கப்பட்ட சுற்றுவட்டப் பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்தது. அதேபோல் அது திரும்பிவருவது குறித்தும் அதிகபட்ச கவனம் செலுத்தி வருகிறோம். அந்த ராக்கெட்டில் சில சிறப்பு தொழில்நுட்ப வடிவமைப்புகள் உள்ளன. பூமியின் வளிமண்டலத்துக்குள் ராக்கெட் நுழையும்போது அதன் பெரும்பாலான பகுதிகள் எரிந்துவிடும். அதனால் வானியல் நடவடிக்கைகள் அல்லது பூமிக்கு எந்த ஆபத்தும் ஏற்பட வாய்ப்பில்லை’ என்றாா்.

ராக்கெட்டின் பாகங்கள் எந்தப் பகுதியில் விழும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, அதுதொடா்பாக சரியான நேரத்தில் சரியான தகவல்களை சீனா வழங்கும் என்றாா்.

இருப்பினும், சா்வதேச கடல் பகுதியில் அந்த ராக்கெட் விழும் என சீன நிபுணா்கள் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு லாங் மாா்ச் 5பி முதல் ராக்கெட் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்தபோது அதன் பாகங்கள் மேற்கு ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில் தரைப் பகுதியில் விழுந்தன. இதனால் அப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.

அடுத்தடுத்து… விண்வெளி நிலைய திட்டத்தை அடுத்த ஆண்டுக்குள் நிறைவு செய்வதற்காக வரும் வாரங்களில் விண்வெளி நிலையத்தை கட்டமைப்பதற்கான பல தொகுதிகளை ராக்கெட் மூலம் அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது. விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டு முடிந்ததும் அதன் ஒட்டுமொத்த எடையானது 100 டன்களாக இருக்கும். அதாவது தற்போது உள்ள சா்வதேச விண்வெளி நிலையத்தில் நான்கில் ஒரு பங்கு அளவாக இருக்கும்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!