தமிழகம்

கடற்படை தளவாட உதிரிபாக உற்பத்தி மையகிறது கோவை!

50views

கடற்படைக்கு தேவையான தளவாட உதிரி பாக உற்பத்தி மையத்தை, கோவையில் ஏற்படுத்த, நகரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், டில்லி கடற்படை தலைமையக அதிகாரி ரியர் அட்மிரல் விருப்பம் தெரிவித்துள்ளார்.

விரைவில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.கோவையில் இந்திய கடற்படை தலைமையகம் மற்றும் கொச்சியில் உள்ள, தென் இந்திய கடற்படை தலைமையக பிரதிநிதிகளுடன், கொடிசியா நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் பேசிய கொடிசியா தலைவர் ரமேஷ்பாபு, “ராணுவத்திற்கு தேவையான தரமான பொருட்களை தயாரிப்பதில், கொடிசியா ஈடுபட்டுள்ளது. ராணுவ ஆர்டர்களை பெறவும், அதை தொழில் துறையினர் பயன்படுத்திக் கொள்ளவும், வழிகளை ஏற்படுத்த முயன்று வருகிறோம். கடற்படையினர் தங்கள் தேவைகளை தெரிவித்தால், அதற்கான தயாரிப்புகளை மேற்கொள்ள இங்குள்ள தொழிற்சாலைகள் தயாராக உள்ளன.

”கடற்படையில் கொச்சின் கப்பல் பழுதுபார்க்கும் தளம், இந்திய விமான படையின் 5பிஆர்டி பிரிவு ஆகியவற்றுடன், கொடிசியா புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இருதரப்பிலும் கலந்தாய்வு சந்திப்புகள் நடத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு துறைக்கும் தொழிற்சாலைகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக்க, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” என்றார். “புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், மற்றும் உள்நாட்டு தயாரிப்புகளை கண்டறியும் செயல்பாடுகளில், முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

கோவையில் உள்ள தொழில் நிறுவனங்கள், 5 வகையான உதிரி பாகங்களை தயார் செய்ய தேர்வு பெற்றுள்ளன. விரைவில் இவை, ராணுவ தளவாட பொருட்களை தயாரிக்கும்,” என்றார், கொடிசியா ராணுவ புதுமை படைப்பு மையத்தின் இயக்குனர் சுந்தரம்.டில்லி கடற்படை தலைமையக அதிகாரி ரியர் அட்மிரல் ஸ்ரீனிவாஸ் பேசுகையில், “நம் கடற்படைக்கு தேவையான உற்பத்தி பொருட்களை தயாரிக்க, கோவையில் வாய்ப்புகள் உள்ளன. இவற்றுக்கான தேவைகளும் உள்ளன. இந்தியாவின் பாதுகாப்பு துறை சார்ந்த புத்தாக்க மையமாக, கோவையில் உள்ள ராணுவ புதுமை படைப்பு மையம் செயல்படுவது பாராட்டுக்குரியது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களை உள்ளடக்கிய பகுதிகளுக்கான, ஒரு முழுமையான உள்நாட்டு தயாரிப்பு மையத்தை, கோவையில் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்,” என்றார். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, ராணுவ தளவாட உற்பத்திக்கான தகுதி நிலை குறித்து அறிந்து கொள்ளும் வகையில், கோவையில் பல்வேறு தொழிற்சாலைகளை பார்வையிட வசதிகள் செய்யப்பட்டன. கடற்படை சார்பில், கமோடர் பி.பி.சிங் மற்றும் கொடிசியா நிர்வாகிகள் பங்கேற்றனர்.இந்த புதிய ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வந்தால், பல கோடி ரூபாய் மதிப்பிலான உதிரிபாக தயாரிப்புக்கான ஆர்டர் கோவைக்கு கிடைக்கும். கோவையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான முக்கிய விதையாக, இந்த ஒப்பந்தத்தை தொழில்துறையினர் காண்கின்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!