தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.
திறப்பு விழாவுக்கு வர இயலாத காரணத்தால் காணொளி வசதி மூலம் அவர் திறப்பு விழாவில் பங்கேற்றார். மருத்துவக் கல்லூரி இல்லாத 11 மாவட்டங்களில் இந்த கல்லூரிகள் கட்டுப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, ஒரு மாநிலத்தில் ஒரே நேரத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படுவது இதுவே முதல்முறை என்றார்.
முன்னதாக, உத்தரப் பிரதேசத்தில் ஒரே நாளில் ஒன்பது மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டதே சாதனையாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் 387ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை, பாஜக ஆட்சிக்கு வந்தபின் 596ஆக அதிகரித்துள்ளது என்றும் முந்தைய மத்திய அரசு மருத்துவம் சார்ந்த படிப்புகளை ஊக்கப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்தில் இருந்து தமிழகத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
“2006ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில், பின்தங்கிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகளை அமைக்க திட்டங்கள் வகுக்கப்பட்டன. அதன் பலனாக, இன்று அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் என்ற காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவு நிறைவேறி உள்ளது.
“இன்று நமது நாட்டிலேயே அரசு மருத்துவக் கல்லூரிகளில் மிக அதிக எம்பிபிஎஸ் இடங்களையும் மருத்துவ மேற்படிப்பு இடங்களையும் கொண்டு, மருத்துவத் துறையில் நாட்டிற்கே முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது,” என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.