இந்தியா

ஒமைக்ரான் எக்ஸ்.இ. வைரஸால் அச்சம் வேண்டாம் – என்டிஏஜிஐ தலைவர் என்.கே.அரோரா தகவல்

181views

ஒமைக்ரான் எக்ஸ்.இ. வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை என்று தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (என்டிஏஜிஐ) தலைவர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளார்.

ஒமைக்ரான் என்ற உருமாறிய கரோனா வைரஸ் தொடர்ந்து மரபணு மாற்றம் அடைந்து வருகிறது. தற்போது பல்வேறு நாடுகளில் ஒமைக்ரான் எக்ஸ். இ. என்ற புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஒருவருக்கு இந்த வகை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதிய வைரஸ் குறித்து மத்திய சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் என்டிஏஜிஐ அமைப்பின் தலைவர் என்.கே. அரோரா கூறியதாவது:

ஒமைக்ரான் வைரஸில் இருந்து பல்வேறு புதிய வகை வைரஸ்கள் உருவாகியுள்ளன. தற்போது சுமார் 7 வகையான ஒமைக்ரான் வைரஸ்கள் பல்வேறு நாடுகளில் பரவி வருகின்றன. இதுபோன்ற மரபணு மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. இந்தியாவில் குஜராத், மகாராஷ்டிராவில் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் எக்ஸ்.இ.வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது. இப்போதைய புள்ளி விவரத்தின்படி இந்தியாவில் இந்த வகை வைரஸ் வேகமாக பரவவில்லை. எனவே புதிய வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த ஜனவரியில் பிரிட்டனில் முதல்முறையாக ஒமைக்ரான் எக்ஸ்.இ. வைரஸ் கண்டறியப்பட்டது. அந்த நாட்டில் இதுவரை 600 பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. வேறு சில ஐரோப்பிய நாடுகளிலும் இவ்வகை வைரஸ் பரவி வருகிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!