Uncategorized

ஐபிஎல் 2021 போட்டிகளிலிருந்து பிரேக் எடுக்கும் அஸ்வின் – என்ன ஆச்சு?

96views

ஐபிஎல் 2021 போட்டிகள் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கின்றன. ஐபிஎல் 2021 புள்ளிப் பட்டியலில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நான்கு வெற்றிகளோடு முதலிடத்தில் இருக்கிறது. நான்கு வெற்றிகளோடு இரண்டாவது இடத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி இருக்கிறது.

நேற்று (ஏப்ரல் 25, ஞாயிற்றுக்கிழமை), சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி பேட் செய்ய தீர்மானித்தது. 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளுக்கு 159 ரன்களை குவித்தது.

அடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணியும் 20 ஓவர் முடிவில் 159 ரன்களைக் குவித்தது. எனவே போட்டி சூப்பர் ஓவருக்குச் சென்றது.

டெல்லி சார்பாக அக்ஸர் படேல் பந்து வீசினார். ஹைதராபாத் 7 ரன்களை எடுத்தது. 8 ரன்களை எடுத்தால் வெற்றி என களமிறங்கியது டெல்லி அணி.

ஹைதராபாத் சார்பாக ரஷித் கான் பந்து வீசினார். 8 ரன்கள் எடுத்து டெல்லியின் வெற்றியை ஷிகர் தவானும், ரிஷப் பண்டும் உறுதி செய்தனர்.

இந்த விறுவிறுப்பான போட்டிக்குப் பிறகு, அவ்வணியின் முக்கிய மற்றும் அனுபவமிக்க சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் சில சொந்த காரணங்களை முன்னிட்டு, ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஒரு பிரேக் எடுப்பதாக ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியானது.

“இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளிலிருந்து, நாளை முதல் நான் ஒரு பிரேக் எடுக்கிறேன். என் குடும்பத்தினர் கொரோனாவுக்கு எதிராக போராடிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த கடினமான நேரத்தில் நான் அவர்களுக்கு உதவ விரும்புகிறேன். எல்லாம் சரியாக நடந்தால், நான் மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவேன் என எதிர்பார்க்கிறேன். நன்றி” என தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

அதற்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் முழு ஒத்துழைப்பு வழங்குவதாக ட்விட்டரிலேயே குறிப்பிட்டிருக்கிறது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி, இந்த ஐபிஎல் தொடரில் இன்னும் சுமார் ஒன்பது போட்டிகளை பல்வேறு அணிகளுக்கு எதிராக விளையாடவிருக்கிறது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் எத்தனையோ வீரர்கள் இருந்தாலும், ஏகப்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடிய, நல்ல அனுபவம் நிறைந்த ரவிச்சந்திரன் அஸ்வின் போட்டியில் இருந்து சொந்த காரணங்களுக்கான ஒரு சிறிய இடைவேளை எடுப்பது, அவ்வணிக்கு பின்னடைவாக அமையலாம் எனவும் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

“இந்தியாவில் நடப்பதைப் பார்க்கும் போது இதயம் உடைகிறது. நான் மருத்துவத் துறையில் இல்லை, ஆனால் அத்துறையில் பணியாற்றும் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியர்கள் அனைவரும் எச்சரிக்கையோடும், பாதுகாப்போடும் இருக்கவும்” என சில தினங்களுக்கு முன்பு தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!