இந்தியா

எஸ்சி, எஸ்டி பதவி உயர்வுக்கான இட ஒதுக்கீட்டை நீக்கினால் ஊழியர்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

63views

பதவி உயர்வுக்கான ஒதுக்கீட்டைநீக்குவது எஸ்சி, எஸ்டி ஊழியர் களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் கீழுள்ள சுமார் 75 அமைச்சகங்கள் அல்லது துறைகளில் 27 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் சுமார் 3,800 பதவிகள்(கேடர்கள்) உள்ளன. ஒவ்வொருகேடர் கட்டுப்பாட்டு அதிகாரியும்,அந்தந்த கேடருக்கான இடஒதுக்கீடு பட்டியல் அடிப்படையில் பதவிஉயர்வுகளைப் பெற்று வருகின்றனர்.

ஆனால் பதவி உயர்வில் எஸ்சி, எஸ்டி சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு முறையில் போதுமான பிரதிநிதித்துவத்தின் அளவை நிர்ணயம் செய்யக் கோரியும், நிபந்தனைகளை தளர்த்தக் கோரியும், ஜர்னைல் சிங் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த ஜனவரியில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அளித்த உத்தரவில், பதவி உயர்வில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு பிரதிநிதித்துவத்துக்கான அளவை உச்ச நீதிமன்றத்தால் நிர்ணயம் செய்ய முடியாது என்று தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து அரசு பணியிடங்களில் எஸ்.சி.,எஸ்.டி பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான தரவுகள் தொடர்பாகவும் அரசின் எண்ணம் தொடர்பாகவும் தகவல்களை பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த தகவல்கள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தை மத்திய அரசு அண்மையில் தாக்கல்செய்தது. அதில் மத்திய அரசு கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் பல்வேறு துறைகளின் கீழ் 27,55,430 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இதில் 4,79,301 பேர் எஸ்.சி. பிரிவினர். 2,14,738 பேர் எஸ்.டி. பிரிவினர் ஆவர். மேலும் 4,57,148 பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

இந்த நேரத்தில் எஸ்.சி, எஸ்.டி.பிரிவினருக்கான பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை ரத்து செய்வது சரியாக இருக்காது. மேலும் இதுஊழியர்களிடையே அமைதியின் மையை ஏற்படுத்தும். மேலும் இதுதொடர்பாக அதிக அளவிலான வழக்குகளும் நீதிமன்றத்தில் தொடுக்கப்படும் நிலையும் ஏற்படலாம்.

இந்த பதவி உயர்வில் இடஒதுக் கீட்டுக்கான கொள்கையானது அரசியலமைப்பு சட்டம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் வகுக்கப்பட்ட சட்டம் ஆகியவற்றைப் பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு அனுமதிக்கப் படாவிட்டால், எஸ்.சி., எஸ்.டி. ஊழியர்களுக்கு வழங்கப்படும் பதவி உயர்வில் இடஒதுக்கீட்டின் பலன்களைத் திரும்பப் பெற வேண்டியிருக்கும்.

மேலும் எஸ்.சி., எஸ்.டி. ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வை திரும்பப் பெற வேண்டியிருக்கும்.

மேலும், இதற்கிடையில் ஓய்வு பெற்ற பல ஊழியர்களின் ஓய்வூதியத்தை மறு நிர்ணயம் செய்தல், அவர்களுக்கு வழங்கப் பட்ட அதிகப்படியான சம்பளம், ஓய்வூதியத்தை திரும்பப் பெறு தல், அவர்களின் சம்பளத்தை மறுநிர்ணயம் செய்தல் போன்றபிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம். இது பல வழக்குகள் தொடர்வதற்கும், ஊழியர் அமைதியின் மைக்கும் வழி வகுக்கலாம்.

அரசு வேலைகளில் எஸ்.சி., எஸ்.டி. ஊழியர்களின் பிரதிநிதித்துவம் போதுமானதாக இல்லை. மேலும் இந்த பணி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவது நிர்வாகத்தை எந்த வகையிலும் பாதிக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!