‘எவரெஸ்ட்’ மலையின் அடித்தள முகாமை அடைந்த, மிகக் குறைந்த வயது ஆசிய நபர் என்ற பெருமையை, 4 வயது இந்திய சிறுவன் பெற்று உள்ளான்.மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில், ஸ்வேதா கோலேச்சா – கவுரவ் கோலேச்சா என்ற இந்திய வம்சாவளி தம்பதியினர் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு அத்வித் என்ற 4 வயது மகன் உள்ளார். மலையேறும் பயிற்சிகளை அத்வித்துக்கு அளிக்க முடிவு செய்த ஸ்வேதா, அவர் நடக்கத் துவங்கிய நாள் முதல், அதற்கான பயிற்சிகளை அளித்து வந்தார். அபுதாபியில் 15வது மாடியில் உள்ள தங்கள் வீட்டிற்கு செல்ல, படியில் ஏற வைத்து பயிற்சிகளை துவங்கி உள்ளார். இப்படி தொடர் பயிற்சிகளை மேற்கொண்டு வந்த அத்வித், தற்போது உலகின் மிக உயரமான எவரெஸ்ட் மலையின் அடித்தள முகாமை அடைந்து சாதனை படைத்துள்ளார்.
தன் தாய் ஸ்வேதா மற்றும் மாமா சவுரப் சுக்கானியுடன், கடந்த அக்டோபர் 28ம் தேதி மலையேற துவங்கிய அத்வித், கடந்த 6ம் தேதி 5,364 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அடித்தள முகாமை அடைந்தார். இதன் வாயிலாக, ஆசியாவில் இருந்து, எவரெஸ்ட் அடித்தள முகாமை அடைந்த மிகக் குறைந்த வயது நபர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.