இந்தியா

எல்லையில் மீண்டும் சீனா அத்துமீறல்: இந்திய படையினருடன் கைகலப்பு..

50views

இந்தியா-சீனா இடையே 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர் தொலைவுக்கு எல்லைப்பகுதி உள்ளது. எல்லைப்பகுதி குறித்து முறையாக வரையறுக்கப்படாத நிலையில், சீன ராணுவம் அடுத்தடுத்து அத்துமீறி வருகிறது. இந்நிலையில், அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள பம் லா கணவாய் மற்றும் திபெத்தின் யாங்சே இடையேயான எல்லைப் பகுதி வழியாக இந்தியாவுக்குள் கடந்த வாரத்தில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைந்தனர். திபெத் வழியாக இந்தியப் பகுதிக்குள் சுமார் 200 சீன வீரர்கள் நுழைந்ததாகவும், பயன்படுத்தப்படாமல் உள்ள பதுங்கு குழிகளை அழிக்க முயற்சி நடைபெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, இருதரப்புக்கும் இடையே கைகலப்பு நடந்துள்ளது. சீன வீரர்கள் சிலரை, இந்தியப் படையினர் சிறைபிடித்து வைத்தனர். உள்ளூர் கமாண்டர்கள் மத்தியில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில், பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட்டு, சீன வீரர்கள் விடுவிக்கப்பட்டதன் மூலம், பதற்றம் தணிந்துள்ளதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய தரப்புக்கு எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்தராகண்ட் பகுதிக்குள் சீன ராணுவம் கடந்த வாரத்தில் ஊடுருவ முயன்ற நிலையில், தற்போது மீண்டும் அத்துமீறல் நடைபெற்றுள்ளது. இதற்கு முன்னதாக, யாங்சே பகுதி வழியாக 2016-ம் ஆண்டில் 200க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் நுழைந்தனர். எனினும், சில மணிநேரங்களில் அவர்கள் வெளியேறினர்.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் கடந்த ஆண்டு மே மாதத்தில் பாங்கோங் ஏரிப் பகுதியில் இருதரப்பு ராணுவ வீரர்களும் மோதிக் கொண்டனர். அது முதலே இந்தியா- சீனா இடையே மோதல் நிலவிவருகிறது.

இருதரப்பும் படைகளைக் குவித்த நிலையில், ராணுவ மற்றும் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு பாங்கோங் சோ மற்றும் கோக்ரா பகுதிகளிலிருந்து படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.

அதேநேரம், இருதரப்பும் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வீரர்களைக் குவித்துள்ளன. அமைதியை ஏற்படுத்தும் வகையில், கிழக்கு லடாக் பகுதியில் கமாண்டர் மட்டத்திலான 13-வது சுற்று பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறுகிறது. இதில், ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதியிலிருந்து படைகளை திரும்பப் பெறுவது குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!