இப்போதுதான் பள்ளிப்படிப்பை முடித்து ஓட்டுநர் உரிமம் பெற்ற எம்மா ரடுகானு, தன் ஸ்போர்ட்ஸ் வாழ்வில் ஏற்கனவே வரலாறு படைத்துள்ளார்.
ஓப்பன் டென்னிஸ் போட்டிகளில் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்ற மிக இளைய வீரர் என்ற புகழைப் பெற்றுள்ளார் எம்மா ரடுகானு.
இந்த வருடம் முழுக்கவே ப்ரிட்டனைச் சேர்ந்த இந்த 18 வயது டென்னிஸ் வீரர் பள்ளிப்படிப்பையும் விளையாட்டையும் சேர்த்தே கவனித்துக்கொண்டார். ஐந்து மாதங்களுக்கு முன்பு கணிதம் மற்றும் பொருளாதாரத்தில் பள்ளி தேர்வை முடித்து, ஓட்டுநர் உரிமத்தையும் பெற்றுள்ளார்.
உலகத் தரவரிசையில் 361வது இடத்தில் இருந்து 16 வது இடத்துக்கு கிடுகிடுவென உயர்ந்துள்ளார்.
கடந்த 42 ஆண்டுகளில் டென்னிஸ் போட்டியில் நான்காவது சுற்றை எட்டிய மிகவும் இளைய பிரிட்டிஷ் பெண்மணி என்ற சாதனையை ஜூலை மாதம் படைத்தார். அவரது திறமையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய வெற்றி அது.
அமெரிக்க ஓப்பன் இறுதிச் சுற்றை எட்டுவோம் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று கூறும் ரடுகானு, விரைவில் வெளியேறிவிடுவோம் என்று தான் பதிவு செய்துவைத்திருந்த விமான டிக்கெட்டுகளையும் ரத்து செய்ய வேண்டியிருந்ததாகக் கூறுகிறார்.
சீனத்தாய்க்கும் ரோமேனியன் அப்பாவுக்கும் கனடாவில் பிறந்த ரடுகானு, தன் பெற்றோருடன் தனது இரண்டாவது வயதில் பிரிட்டன் வந்தார். லண்டனில் வளர்ந்த ரடுகானு, பாலே, குதிரையேற்றம், நீச்சல், கூடைப்பந்து, கோகார்ட்டிங் போன்ற எல்லாவற்றையும் முயற்சி செய்துவிட்டு பிறகு தென்கிழக்கு லண்டனில் ப்ரோம்லி டென்னிஸ் அகாடமியில் சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது ஐந்து.
அவருக்கு உலகின் புகழ் வெளிச்சம் வருவதற்கு முன்பே ரடுகானுவின் தனித்திறமை நிபுணர்களைக் கவர்ந்திருக்கிறது. தனது விளையாட்டு சிமோனா ஹாலெப் மற்றும் லீ னாவால் உந்தப்பட்டது என அவர் கூறுகிறார். இவர்கள் இருவரும் அவரது மரபின் பிரதிநிதிகளாகவும் இருக்கிறார்கள்.
“ஹாலெப்பைப் போல விளையாட்டு உத்வேகத்துடன் உடல் அமைப்புடன் இருக்க விரும்புகிறேன், லினாவின் விளையாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது வீச்சுகள் வலுவானவை. அவரது மனநிலை எனக்குப் பிடிக்கும் எனக்கும் அது வரவேண்டும் என்று நான் ஆசைப்படுவதுண்டு” என்கிறார்
கடந்த சில மாதங்களாக இந்த வலுவான மனநிலையையே அவர் காட்டிவருகிறார்.
“எனக்கு ஜெயிக்கவேண்டும் என்ற அழுத்தம் இல்லை, எல்லா அழுத்தமும் நமக்குள்ளிருந்து வருவதுதான். என் படிநிலை என் விளையாட்டு பற்றி எதிர்பார்ப்புகள் உண்டு என்றாலும் முடிவுகளைப் பற்றிய அழுத்தம் இல்லை எனக்கு,” என்கிறார்.
சமீபத்தில் பல பிரிட்டிஷ் பிரபலங்கள் சமூக ஊடங்கங்களில் இவரைப் புகழ்ந்தார்கள். முன்னாள் ஒயாஸிஸ் வீரர் லியாம் காலஹர் அவரை “நட்சத்திரத் திறமைசாலி” எனவும் முன்னாள் இங்கிலாந்து கால்பந்து வீரர் காரி லினேகர் அவரின் விளையாட்டு பார்ப்பதற்கு மகிழ்ச்சி தருவதாகவும் தெரிவிக்கிறார்.
அமெரிக்க ஓப்பன் போட்டியில் ராடுகானுவுக்கு எதிராக வேறொரு நட்சத்திர வீரர் விளையாட இருக்கிறார். கனடாவைச் சேர்ந்த லெய்லா ஃபெர்னாண்டஸ். இவரது தந்தை ஈக்வடாரைச் சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரர்.
இந்த ஒற்றுமைகள் இருந்தாலும் இதுபோன்ற ஒப்பீடுகளிலிருந்து ரடுகானு விலகியே இருக்கிறார், விளையாட்டின் அந்ததந்த நொடிகளில் கவனம் செலுத்துகிறார்.
“உங்களையும் உங்கள் சொந்த முடிவுகளையும் நீங்கள் வேறொருவருடன் ஒப்பிட்டால் மகிழ்ச்சி போய்விடும்” என்று அரையிறுதிப் போட்டிக்குப் பின்பு ரடுகானு தெரிவித்தார்.
“எல்லாரும் அவரவர் வேலையைச் செய்கிறார்கள். 18 மாதங்கள் நான் போட்டியில் கலந்துகொள்ளவேயில்லை. ஆனால் இங்கு இப்போது வந்து சேர்ந்திருக்கிறேன். தன்னம்பிக்கை இருந்தால் எதையும் அடையலாம் என்பதற்கு இதுவே சாட்சி” என்கிறார்.