அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், பெண் குழந்தைகளின் கல்வி உரிமை போராளியுமான மலாலாவுக்கு இங்கிலாந்தில் திருமணம் நடைபெற்றுள்ளது.
பெண் குழந்தைகளின் கல்விக்காக போராடியவர், பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள மிங்கோரா என்ற கிராமத்தைச் சேர்ந்த மலாலா (Malala Yousafzai). தலிபான்களின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானில் பெண் குழந்தைகளின் கல்விக்கான அடிப்படை உரிமையை ஆதரித்ததற்காக, 2012ஆம் ஆண்டு தலிபான்களால் சுடப்பட்டார் மலாலா. இந்த சம்பவம் உலக அளவில் அப்போது பரபரப்பானது. தலையில் பலத்த காயமடைந்து இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த மலாலா, தனது குடும்பத்தினருடன் அங்கேயே வசித்து வருகிறார்.
தனது 16வது வயதில் கல்வியில் பாலின சமத்துவத்தின் அவசியம் குறித்து ஐநாவில் உரையாற்றிய மலாலா, தொடர்ந்து பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் பணியாற்றி வருகிறார். இதற்காக அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப் பட்டது. இந்நிலையில், இங்கிலாந்தின் பர்மிங்காமில் உள்ள வீட்டில் தனக்கு திருமணம் நடைபெற்றுள்ளதாக மலாலா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில், அஸர் என்பவரை திருமணம் செய்து கொண்டதாகவும், வீட்டில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், திருமண புகைப் படங்களையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
அந்தப் பதிவில், என் வாழ்வில் இது பொன்னான நாள். அஸரும் நானும் திருமணம் செய்துகொண்டோம். எங்கள் குடும்பத்துடன் பர்மிங்காமில் உள்ள வீட்டில் திருமண விழாவைக் கொண்டாடினோம். உங்கள் ஆசீர்வாதத்தை அனுப்புங்கள் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு ஏராளமானோர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.