தமிழ்நாட்டில் 14ஆம் தேதி முதல் டாஸ்மாக் திறப்பு,இ-பதிவு முறை ரத்து போன்ற தளர்வுகளுக்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்திற்கு சென்று அச்சுறுத்தி வந்தது. பின்னர் ஊரடங்கு விதிக்கப்பட்டதாலும் தீவிர நடவடிக்கையின் காரணமாகவும் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதில் 2 வாரங்கள் தளவுகள் இல்லாத முழு ஊரடங்கும் அடங்கும்.
இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், என்னென்ன தளர்வுகள் அளிக்கப்படும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தற்போது மாவட்டங்கள் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவு முறை இருக்கும் நிலையில் அந்த நடைமுறை ரத்து செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் வெளிநாடு, வெளிமாநிலங்களில் வர இ பதிவு கட்டாயம் என்ற நடைமுறை நீடிக்கும் என கூறப்படுகிறது.
டாஸ்மாக் கடைகள் நீண்ட காலமாக மூடப்பட்டுள்ளன. எனவே பார்கள் இல்லாமல் டாஸ்மாக் கடைகள் மட்டும் கட்டுப்பாடுகளுடன் இயங்குவதற்கான அறிவிப்பு வரலாம்.
மிக முக்கியமாக கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் குறிப்பிட்ட நேரம் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கபட வாய்ப்பு இருக்கிறது.
சலூன் கடைகள் திறக்கப்பட வாய்ப்புகள் இருக்கின்றன. சில தனியார் நிறுவனங்கள் திறக்கப்பட அனுமதிக்க வாய்ப்பு இருக்கிறது. அதே வேளையில் பொது போக்குவரத்துக்கு தடை நீடிக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது முழு ஊரடங்கு நிலவி வரும் கோவை, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.
ஏற்கனவே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகள், மருத்துவக்குழுவுடன் ஆலோசனை நடத்திய நிலையில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.