தமிழகத்தில் ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே செல்ல முடியாது, விரைவில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் சங்கிலியை உடைத்தாலே கொரோனா பரவலைத் தடுத்துவிட முடியும். கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலத்தில் கடந்த வாரத்தில் அதிகமாகியது. அதுவும் கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வருகிறது.எனவே, கொரோனாவை முழுமையாகக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கைத் தவிர வேறு வழியில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும்.
முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து பல்வேறு ஏற்பாடுகளை அரசு செய்து தந்துள்ளது . மக்களை நோக்கி காய்கறிகள் , மளிகைப் பொருட்கள் வந்து சேர ஏற்பாடுகள் செய்துள்ளோம் . ரேசன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன .
பொதுமக்களுக்குத் தேவையான 13 பொருட்கள் அடங்கிய தொகுப்பு தரப்பட உள்ளது . இதனை பொதுமக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் . முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்களில் குறிப்பிட்ட பிரிவினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது உண்மைதான் .
அதனாலதான் , கொரோனா நிவாரண நிதியாக முதல் கட்டமா 2000 ரூபாயைக் கொடுத்துள்ளோம் . விரைவில் அடுத்த 2000 ரூபாயைக் கொடுக்கப் போகிறோம் . இதனை பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி கூட பாராட்டியுள்ளார் . இருந்தாலும் ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே போகமுடியாது , அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும், அதுவும் மக்களாகிய உங்கள் கையில் தான் இருக்கிறத என தெரிவித்துள்ளார் .
கட்டுப்பாடுகளை முழுமையாகப் பின்பற்றினால் கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் .
ஒரே நாளில் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுகிறோம் . இந்தளவுக்கு தடுப்பூசி வேறு எந்த மாநிலங்களிலும் போடப்படவில்லை . ஒரு நாளில் 1.70 லட்சம் பேருக்கு ஆர் . டி . பி . சி . ஆர் . பரிசோதனை செய்கிறோம் . இந்தளவுக்கு பரிசோதனை வேறு எந்த மாநிலத்திலும் செய்யப்படவில்லை .
கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களை பார்க்க நான் சென்றதன் மூலமாக பதற்றம் அடையும் மக்களுக்கு நான் சொல்வது – இந்த எச்சரிக்கை உணர்வு அனைத்து மக்களுக்கும் வந்தாக வேண்டும் . இத்தகைய தொற்றுக்கு முழுமையான முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் .
முதல் அலைக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கத் தவறியதால்தான் இரண்டாவது அலையை நாம் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று . இந்த இரண்டாவது அலையானது தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புக்கும் , நிதி நிலைமைக்கும் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது . இதில் இருந்து நாம் விரைவில் மீண்டாக வேண்டும் .
நிகழ்காலச் சோகங்களில் இருந்து மீண்டு – எதிர்காலப் புத்துணர்வை தமிழக மக்கள் அனைவரும் பெற்றாக வேண்டும் ! கொரோனா தொற்றை வெல்வோம் – நமக்கான வளம் மிகுந்த தமிழகத்தை அமைப்போம் என பேசியுள்ளார்.