தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள 39 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று காலை சரியாக 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
வாக்குச்சாவடி சீட்டு இல்லாதவர்கள் வாக்காளர் அடையாளஅட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதேபோல் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாலை 5 மணிக்கு மேல் உரிய பாதுகாப்புடன் வந்து வாக்களிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை,திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு 2 கட்டங்களாக இன்று அக்.6ஆம் தேதி மற்றும் வரும் 9-ம் தேதிகளில் நடைபெற உள்ளன.
மற்றும் இதர 28 மாவட்டங்களில் கடந்த ஜூன் மாத நிலவரப்படி காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.
தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க தனியார் நிறுவனங்களுக்கு தொழிலாளர் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் 24,416 பதவிகளுக்கு 80,819 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணியில் போட்டியிட்ட கட்சிகள் எல்லாம் இம்முறை ஊராட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகின்றன. திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அமமுக, மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.